என்ஐடியில் தொழில்நுட்ப விழா நிறைவு: மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்
By DIN | Published On : 04th March 2019 12:51 AM | Last Updated : 04th March 2019 12:51 AM | அ+அ அ- |

காரைக்கால் என்.ஐ.டி.யில் 3 நாள்கள் பல்வேறு மாநில மாணவர்கள் பங்கேற்ற தொழில்நுட்ப விழா சனிக்கிழமை நிறைவடைந்தது. சுமார் ஆயிரம் மாணவர்கள் பல்வேறு துறைகளில் நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
காரைக்காலில் இயங்கிவரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.டி.யில், கியாந்த் என்கிற பெயரில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்கக்கூடிய தொழில்நுட்ப விழா நடத்தப்படுகிறது. இவ்விழா பிப். 28 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரையிலான விழா என்.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு துறை தொழில்நுட்ப வகுப்புகள், போட்டிகள், தொழில்நுட்பம் சாரா பல போட்டிகள் நடத்தப்பட்டன. காரைக்கால் பகுதியை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 40 மாணவர்கள் பங்கேற்று அறிவியல் மாதிரிகள் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு திறனை வெளிப்படுத்தினர். காரைக்கால், தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்து மாணவர்கள் சுமார் 800 பேர் கலந்துகொண்டு, பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மேலும், ஆன்லைன் முறையிலும் ஏராளமான மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
நிறைவு நிகழ்ச்சி என்.ஐ.டி. இயக்குநர் கே.சங்கரநாராயணசாமி முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஓ.என்.ஜி.சி. காவிரி அசெட் பொதுமேலாளர் என். தங்கராஜ், காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினர்.
தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள், கருத்தரங்க உரையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை அவர் வழங்கினார்.
என்.ஐ.டி. மாணவர்கள் தயாரித்த மின் சக்தியில் இயங்கக்கூடிய மோட்டார் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதுபோன்று ரோபோ தயாரிப்பு உள்ளிட்ட மாணவர்களால் தயாரிப்பு செய்த பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த விழாவின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு திறனை வெளிப்படுத்தியதோடு, பல்வேறு கருத்துகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவானதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக தொழில்நுட்ப விழா தலைவர் டி. வினோபிரபா வரவேற்றார். இயக்குநர் கே. சங்கரநாராயணசாமி, பதிவாளர் ஜி. சீதாராமன் வழிகாட்டலில் பேராசிரியர்கள் ஆர்.சந்திரசேகரன், டி.ரகுபதி மற்றும் மாணவர் தலைவர் ரோஹன் சிங், துணைத் தலைவர் திவ்யா பிரேமச்சந்திரன், செயலர் சுராஜ் உன்னி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.