சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள்

காரைக்கால் மற்றும் திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை யொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காரைக்கால் மற்றும் திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை யொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரி வழிபாடு அனைத்து சிவன் கோயில்களிலும் திங்கள்கிழமை (மார்ச் 4)  இரவு நடைபெறவுள்ளது. இரவு முழுவதும் 4 கால பூஜையாக வழிபாடு நடத்தப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில்,  பிரசித்திப் பெற்று விளங்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில், காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ சோமநாதர், ஸ்ரீ பார்வதீசுவரர், ஸ்ரீ அண்ணாமலையேசுவரர், ஒப்பிலாமணியர் கோயில்,  தருமபுரம் ஸ்ரீ யாழ்முரிநாதர் கோயில், திருவேட்டைக்குடி ஸ்ரீ திருமேனியழகர் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயில், ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயில் உள்ளிட்டவற்றில் திங்கள்கிழமை இரவு 9 முதல் அதிகாலை 6 மணிக்குள்ளாக  நான்கு கால பூஜையும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகங்கள் செய்துள்ளன.
ஒவ்வொரு கால பூஜையிலும் சிவலிங்கத்துக்கு பல்வேறு வகையான பழங்கள், திரவியங்களுடன் அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்படுகிறது. திருநள்ளாறு  ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா கடந்த மாதம் நடைபெற்றது. கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுவருவதால், பக்தர்கள் திரளாக வருவதை கருத்தில்கொண்டு சிவபெருமானை தரிசிக்க சிறப்பு வரிசை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. திருநள்ளாறு கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை தங்க  ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. மற்ற கோயில்களிலும் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. 
இதுதவிர, காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் கிராமப்புறங்களையொட்டி வயல்வெளிப் பகுதியில் சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலங்கத்துக்கு கிராம மக்கள் ஒன்றுதிரண்டு, சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அபிஷேகப் பிரியர் என கூறப்படும் சிவபெருமானுக்கு இரவு முழுவதும் நடக்கும் அபிஷேகத்தைக் காண, மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சிவன் கோயில்கள் மற்றும் கிராமப்புற கோயில்களில் ஒரு இரவில் பெரும்பாலானவற்றை தரிசிக்கும் திட்டத்தில், பக்தர்கள் குழுவினர் சுற்றுலா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். 
சிவராத்திரியையொட்டி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு, கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சியாக ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்ய ஸ்ரீ ஓம்காரநந்தா சுவாமியின் தலைமையில் செயல்படும் தர்ம ரக்ஷ்ணா ஸமிதி சார்பில் காரைக்கால் அம்மையார் குளக்கரையிலும், காக்கமொழி ஸ்ரீ கார்கோடகபுரீசுவரர் கோயில் வளாகத்திலும் பக்தர்கள் பங்கேற்புடன் சிவநாம அர்ச்சனை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com