திருப்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம்
By DIN | Published On : 08th March 2019 09:39 AM | Last Updated : 08th March 2019 09:39 AM | அ+அ அ- |

திருப்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் பகுதி திருப்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளியில் புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் டி. பிரதாப் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி கலந்துகொண்டு, மகளிர் தின வாழ்த்துகளைக் கூறி, மகளிர் பெருமைகளை விளக்கிப் பேசினார். ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கு மகளிர் தின பேட்ஜ் அணிவித்தார். கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளர்கள் எஸ். கார்த்திகேசன், கண்மணி, உடற்கல்வி இயக்குநர் மனோகரன், பள்ளி தலைமையாசிரியர் எஸ். சேதுராமன், ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் வி. முத்தமிழ் குணாளன், சமூக சேவகர் நாக. தியாகராஜன் ஆகியோர் மகளிர் தினம் தொடர்பாக வாழ்த்துரை வழங்கினர்.
பல்வேறு தொடக்கப் பள்ளிகளில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துகொண்டனர். மாணவியரிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 70-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியைகளிடையே போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.
சங்க பொதுச் செயலர் எம். விஜயகுலசேகரன் வரவேற்றார். சங்கப் பொருளாளர் ஆர். சிவநேசன் நன்றி கூறினார்.