சுடச்சுட

  

  பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்

  By DIN  |   Published on : 17th March 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பாரத ஸ்டேட் வங்கி காரைக்கால் முதன்மைக் கிளை ஏடிஎம் மையத்தில், ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
  காரைக்கால் பாரத ஸ்டேட்  வங்கி சார்பில், ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் யோனோ கேஷ் என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாடு முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் சனிக்கிழமை இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  
   நிகழ்ச்சியில் கிளை முதன்மை மேலாளர் கிறிஸ்டோபர், துணை மேலாளர் அனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்து, வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை குறித்து செயல்விளக்கத்துடன்  விளக்கிக் கூறினர்.
   இந்த திட்டம் குறித்து வங்கி மேலாளர்கள் கூறியது : ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அட்டை இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் வசதியை யோனோ கேஷ் செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வங்கி தலைவர் ரஜ்னிஷ்குமார் அறிமுகப்படுத்தினார்.  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க விரும்பினால், தங்களது செல்லிடப்பேசியில் யோனோ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த செயலியைப் பயன்படுத்தி, 6 இலக்க தனி நபர் அடையாள எண்ணைக் கொடுக்க வேண்டும். இதன் பிறகு பணம் பரிவர்த்தனைக்கான அங்கீகாரம் அளிக்கும் 6 இலக்க எண், வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் கிடைக்கும்.  அடுத்த அரை மணி நேரத்தில் அருகாமையில் இருக்கும் யோனோ கேஷ் மையத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம். செல்போனில் பெற்ற 6 இலக்க எண் மற்றும் பரிவர்த்தனைக்கான அடையாள எண்களையும் பதிவு செய்து பணம் எடுக்கலாம். ஏடிஎம் அட்டையே தேவையில்லை. இதற்கு சேவைக் கட்டணம் கிடையாது. மேலும் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம். 
  அவசரத்துக்கு ஏடிஎம் அட்டை எடுத்துச் செல்லவில்லை என்றால், செல்லிடப்பேசியில் யோனோ கேஷ் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இதை பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai