நிரவி பகுதி குடியிருப்புகளில் குடிநீர் முறையாக விநியோகம் ஆவதில்லை எனப் புகார்

நிரவி பகுதி குடியிருப்புகளில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படுவதாகவும், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம்

நிரவி பகுதி குடியிருப்புகளில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படுவதாகவும், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் கோடைக்காலம் தொடங்கிவிட்டால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளில் குடிநீர் பிரதானமாக விளங்குகிறது. காரைக்கால் நகரப் பகுதிக்கும், பிறகொம்யூன் பகுதி மக்களுக்கும் அந்தந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் சேமித்து விநியோகிக்கப்படுகிறது. நகரப் பகுதியில் பொதுப்பணித் துறை நிர்வாகமும், கொம்யூன் பகுதிகளில் பஞ்சாயத்து நிர்வாகமும் இதை செயல்படுத்துகின்றன. சாலையோர பிரதான குழாயிலிருந்து சாதாரண முறையில் வீடுகளின் கீழ்நிலை தொட்டிக்கு தண்ணீர் செல்லும் வகையில் குழாய் பதிப்புக்கு அரசுத்துறை அனுமதி வழங்குகிறது. ஆனால், குடியிருப்புக்கு தண்ணீர் வரத்து வேகம் குறைவாக இருப்பதாகக் கூறி, அதிக உறிஞ்சும் திறன் கொண்ட மோட்டார் வைத்து பிரதான குழாயிலிருந்து வீடுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. மோட்டார் வைத்திருக்கும் வீடுகள் தவிர்த்து, பிற வீடுகளுக்கு தண்ணீர் செல்வதன் வேகம் வெகுவாக குறைகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு நிர்வாகத்தினர் சோதனை செய்து மோட்டார்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை சில கொம்யூன் பஞ்சாயத்தில் எடுக்கப்படுகிறது. எனினும் மோட்டார் வைத்திருப்போர் செயல்பாடுகளில் மாற்றம் காணமுடியவில்லை.
நிரவி - திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிரவி கொம்யூனில் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் அருகே மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி உள்ளது. இங்கு சேமிக்கப்படும் குடிநீர், நிரவி பகுதி மக்களுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. 
இதில், கிளாஸ் தெரு, வாழைக்கொல்லைத் தெரு, வள்ளுவர் தெரு, ஓஎன்ஜிசி சாலை, குட்டிப்பிள்ளையார் கோயில் தெரு, பாம்பனியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு கடந்த சில நாள்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல்நிலை குடிநீர் தொட்டியில் மோட்டார் பழுதாக இருந்தாலும் இதை சீர்செய்ய விரைவு நடவடிக்கை எடுப்பதில்லை.  குடிநீர்  மற்றும் வீட்டு வரி வசூலிப்பு செய்து ஊழியர்கள் ஊதியம் எடுத்துக்கொள்ள பயன்படுத்துகிறார்களே தவிர, மக்கள் பாதிக்கப்படும்போது அதற்கான காரணத்தை கண்டறிந்து, களைய நடவடிக்கை எடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் முன்னுரிமை தரப்படுவதில்லை. கோடை வெயில் காலமாக இருப்பதால், தண்ணீர் தேவையை சமாளிக்க முடியவில்லை. எனவே, இந்த விவகாரத்தில், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தலையிட்டு பிரச்னையை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நிரவி பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com