வியாபாரிகள் பாதிக்கும் வகையில் தேர்தல் துறையினரின் நடவடிக்கை இருக்கக் கூடாது: தமுமுக மாநிலச் செயலர் ஐ. அப்துல்ரஹீம்

வியாபாரத்துக்கு பணம் கொண்டு செல்வோர் பாதிக்கும் வகையில் தேர்தல் துறையினரின்

வியாபாரத்துக்கு பணம் கொண்டு செல்வோர் பாதிக்கும் வகையில் தேர்தல் துறையினரின் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படையினர் செயல்பாடுகள் இருக்கக் கூடாது, இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதியான உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என தமுமுக வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலர் ஐ. அப்துல் ரஹீம் ஞாயிற்றுக்கிழமை கூறியது :  மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் தமிழகம், புதுவையில், இந்த விதியை அமல்படுத்துவதில் தேர்தல் துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்து செயல்படுவதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே வேளையில், தேர்தல் துறையினர் செயல்பாடுகள் பொதுமக்கள், சிறு, நடுத்தர வியாபாரிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படும் வகையில் அமையக் கூடாது என்பதே எங்கள் கருத்து.
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ளன. இரு தரப்பிலும் எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன. இதுதவிர, பறக்கும் படையினர் உள்ளிட்ட கண்காணிப்புக் குழுவினர், ஆங்காங்கே வாகனச் சோதனை என தவறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான அமைப்புகள் தீவிரமாக பணியாற்றிவருகின்றது.
வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறது என்ற சந்தேகத்தில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என்ற தொகை கொண்டு சென்றாலே பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்கால், நாகப்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளன. 
சிறு மீன் வியாபாரிகள் கையில் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு மீன் வாங்க செல்வர். அதுபோல இறைச்சி வியாபாரிகள் இறைச்சிக்கான கால்நடைகளை வாங்குவதற்கு ரொக்கம் கொண்டு செல்வர். இந்த வியாபாரிகள் பணத்துக்கு ஆவணம் கொண்டு செல்ல முடியாது.
நகரப் பகுதியில் சிறு வியாபாரம் செய்வோர் பொருள்களை பெருநகரத்தில் வாங்குவதற்கு ரொக்கத்தை கொண்டு செல்வர். இவை ஒருபோதும் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கக்கூடியதாக கருத முடியாது. இதுபோன்றவர்களை சோதனையிட்டு அறியும்போது, இவை நியாயமானது என தெரியவரும்போது எந்தவித மேல் நடவடிக்கைக்கும் உள்படுத்தாமல் விடுவிப்பதே  சிறந்த செயலாகும். 
இதைவிட்டு தேர்தல் துறை தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்வதும், வருமான வரித்துறையினருக்கு தெரிவிப்பதும் என்பதெல்லாம் பல லட்சம், பல  கோடி ரூபாய் கொண்டு செல்வோரை செய்யலாம். சிறு வியாபாரிகளுக்கு இதனால் வருமான இழப்பு ஏற்பட்டு, மன உளைச்சலுக்குள்ளாக நேரிடும். எனவே இந்த விவகாரத்தில் தமிழக, புதுவை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதியான உத்தரவை சம்பந்தப்பட்டவர்களுக்கு பிறப்பிக்கவேண்டும் என தமுமுக சார்பில் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com