80 சதவீத கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி பணி நிறைவு

காரைக்கால் மாவட்டத்தில்  நடைபெற்ற சிறப்பு முகாமில், 80 சதவீத கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில்  நடைபெற்ற சிறப்பு முகாமில், 80 சதவீத கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி அரசின் கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம்  காரைக்காலில் கோமாரி நோய்த் தடுப்புத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் வீடு வீடாக கால்நடை மருத்துவர்கள் சென்று கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணியை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர்.  
காரைக்காலில் இப்பணி கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதுகுறித்து காரைக்கால் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் லதா மங்கேஷ்கர் கூறியது :
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி என்கிற நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடும் பணி நிகழாண்டு 16-ஆவது சுற்றாக மேற்கொள்ளப்பட்டது.
வீடு வீடாகச் சென்று ஆடு, மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் தடுப்பூசி போட்டனர். முகாம் நிறைவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 12,262 மாடுகளுக்கும், 14,625 ஆடுகளுக்கும் என மொத்தம் 26,887 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 80 சதவீத பணி நிறைவடைந்துவிட்டது. மருத்துவர்கள் வீடுகளுக்கு செல்லும்போது கால்நடையோ அல்லது வீட்டுக்குரியவரோ இல்லாமல் இருந்திருக்கலாம். கால்நடைக்கு ஊசி போடக்கூடிய ஆரோக்கியம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இதுபோன்ற கால்நடைகள் விடுபட்டிருக்க வாய்ப்புண்டு. எனவே, அவ்வாறான கால்நடை குறித்து அந்தந்த பகுதி கால்நடை மருத்துவமனையில் தகவல் தெரிவித்தால் மருத்துவர்கள் சென்று ஊசி போடுவர்.
தற்போது வெயில் காலமாக இருப்பதால் கால்நடைகளுக்கு பல்வேறு விதத்தில் சுகவீனம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, கால்நடை வளர்ப்போர் கடும் வெயிலில் அவற்றை மேய விடுவதைத் தவிர்க்க வேண்டும். மரங்களின் நிழலில் கால்நடைகளைக் கட்டிவைக்க வேண்டும். தினமும் இரு வேளை கால்நடைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் வைக்க வேண்டும். 
உரிய கவனத்துடன் கால்நடைகளைப் பராமரித்தால், கோடை வெயில் பாதிப்பிலிருந்து அவற்றைக் காப்பாற்ற முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com