அம்மையார் ஐக்கிய இசைப் பெருவிழா: இன்று தொடங்குகிறது

காரைக்கால் அம்மையார் ஐக்கிய இசைப் பெருவிழா சனிக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது. 

காரைக்கால் அம்மையார் ஐக்கிய இசைப் பெருவிழா சனிக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது. 
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. கைலாசநாதர் கோயில் சார்பில், ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி திருக்கல்யாணம் உள்ளிட்டவையுடன் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமான பங்குனி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் ஐக்கிய விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இந்த நிகழ்ச்சி 2 நாள்கள் நடைபெறுகின்றன.
முதல் நாள் நிகழ்ச்சி தொடக்கமாக  காரைக்கால் அம்மையாருக்கு சனிக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து பகல் 12 மணியளவில் அம்மையார் மணிமண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 
மாலை நிகழ்வாக, அம்மையார் கோயிலில் இருந்து  சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் அம்மையார் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது கைலாய வாத்தியங்கள் என்று கூறக்கூடிய பழைமையான வாத்தியங்களின் இசையுடன் வீதியுலா நடைபெறவுள்ளது.
கைலாசநாதர் கோயிலைச் சென்றடைந்ததும் நடராஜர் சன்னிதியில் அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்வாக சிறப்பு தீபாராதனை  நடைபெறவுள்ளது.
இசைப் பெருவிழா : இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை அம்மையார் ஐக்கிய நிகழ்ச்சியையொட்டி, அம்மையார் மணிமண்டபத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. காலை 9 முதல் இரவு 9 மணி வரை உள்ளூர் கலைஞர்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மதிய வேளையில் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com