மருத்துவ நிறுவனத்தினருடன் நலவழித்துறை இயக்குநர் ஆலோசனை

காரைக்காலில் பல்வேறு மருத்துவ நிறுவனத்தினருடன் புதுச்சேரி நலவழித்துறை இயக்குநர் தலைமையிலான

காரைக்காலில் பல்வேறு மருத்துவ நிறுவனத்தினருடன் புதுச்சேரி நலவழித்துறை இயக்குநர் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி நலவழித்துறை சார்பில் ஆண்டுதோறும் கிளினிக்கல் எஸ்டாபிளிஷ்மென்ட் என்கிற மருத்துவ மையங்கள் நிறுவுதல் தொடர்பான 2010-ஆம் ஆண்டு விதிகள் குறித்த பயிற்சிப் பட்டறை காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி நலவழித்துறை இயக்குநர் மருத்துவர் கே.வி.ராமன் தலைமையில் 2 மருத்துவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பி.சித்ரா, நலவழித்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவர்கள் அடங்கிய கிளினிக், ஆய்வகம், பிசியோதெரபி மையங்கள், ஊசி போடும் மையம், ஸ்கேன் மையம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் நடத்துவோர் சுமார் 70 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
துணை இயக்குநர் மோகன்ராஜ் கூறியது :  
ஆண்டுதோறும் இக்கூட்டம் நடத்தப்பட்டு, துறை சார்பில் மையத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, நிறுவனத்தினரின் கருத்துகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவ நிறுவனம் அமைப்பதற்கான அனுமதியை நலவழித்துறை வழங்குகிறது. நிறுவனத்துக்கான அடிப்படைத் தேவைகள் இருக்கிறதா போன்றவற்றை ஆராய்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வகையில் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்கிறது, நலவழித்துறையிடமிருந்து அவர்கள் கோருவது என்னென்ன என்பது குறித்தே இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மையங்களில் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளை சுற்றுச்சூழல் மாசடையாதவாறு செயல்படுத்தும் விதி உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த நிறுவனம் இவற்றை எடுத்துச் சென்று சுத்திகரிக்கிறது. இந்த நிறுவனத்தினர் அடிக்கடி காரைக்கால் வருவதில்லை என மையத்தினர் தெரிவித்தனர். இது சரி செய்யப்படுமென துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. நலவழித்துறையின் விதிகளை சரியாக பின்பற்றுமாறு கூட்டத்தில் பங்கேற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது 
என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com