Enable Javscript for better performance
கந்தூரி விழாவுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    கந்தூரி விழாவுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 27th March 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கந்தூரி விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டிய அனைத்து வசதிகளும் செய்துத்தரப்படும் என்று விழாக் குழுவினரிடம் ஆட்சியர் உறுதியளித்தார்.
    காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா வரும் ஏப்ரல்15- ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி  வரை நடைபெறவுள்ளது. பொதுவாக கந்தூரி விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்யும். நிகழாண்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில், கந்தூரி விழா வருவதால், பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு தேர்தல் நடத்தை விதிகளை தெரிவிக்கும் விதமாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கந்தூரி விழாவில் கொடியேற்றம், கண்ணாடி ரதம் ஊர்வலம், சந்தனக்கூடு, கொடியிறக்கம் வரையிலான சிறப்புகள் குறித்தும், பல்வேறு பகுதிகளில் இருந்து விழாவில் பங்கேற்க வரும் மக்களின் எண்ணிக்கை குறித்தும், மாவட்ட நிர்வாகத்திடம் தேவையான உதவிகள் குறித்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் விளக்கிக் கூறினர்.
    ஆட்சியர் பேசும்போது, "கந்தூரி விழாவில் ஊர்வலம் நடைபெறக்கூடிய பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படும். சாலையில் ரதம் செல்லக்கூடிய வகையில் இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படும். கேபிள் டிவி, மின்சார வயர்கள் சரி செய்துத்தரப்படும். குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யவும், தீயணைப்பு வாகனம் குறிப்பிட்ட பகுதியில் நிறுத்திவைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். கந்தூரி விழாவுக்கு மாவட்ட நிர்வாகத்தால் என்னென்ன வசதிகள் முன்னதாக செய்துத்தரமுடியுமோ அவற்றை படிப்படியாக செய்துதரப்படும் என்றார்.
    கூட்டத்தில் கலந்துகொண்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் பேசும்போது, "ஊர்வலம் போன்றவற்றில் பாதுகாப்பற்ற பொருள்களை கொண்டு செல்லக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை கண்டிப்பாக கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு ரதத்திலும் தீயணைப்பு சாதனங்கள் வைத்திருக்கவேண்டும். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி சாதனம் பயன்படுத்தக்கூடாது. கொடியேற்றம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை அளிக்கும். அமைதியான முறையில் விழா முடிவடைய அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் டி.மாரிமுத்து, வீரவல்லவன் மற்றும் மின்துறை செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யால் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், சமாதானக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai