Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல்: காரைக்காலில் சூடுபிடிக்காத பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல்: காரைக்காலில் சூடுபிடிக்காத பிரசாரம்

    By DIN  |   Published on : 27th March 2019 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் உள்ள காரைக்காலில் தேர்தல் பிரசாரம் சூடிபிடிக்கவில்லை. தேர்தல் காலம் என்பதற்கான அறிகுறியே காணமுடியாத நிலை காரைக்காலில் நிலவுகிறது.
    புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைக் கொண்டது புதுச்சேரி மக்களவைத் தொகுதி. இத்தொகுதி 10.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்டது. புதுச்சேரி பிராந்தியத்திலிருந்து  2-ஆவது அதிக வாக்காளர்களைக் கொண்டதாக 1.54 லட்சம் வாக்காளர்களுடன் காரைக்கால் உள்ளது.
    காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாவட்டத் தேர்தல் அதிகாரியாக செயல்படுகிறார். ஒருபுறம், தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு, வாகனச் சோதனை, இயந்திரங்கள் பரிசோதனை, அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது போன்றவற்றை தேர்தல் துறை செய்துவருகிறது. மறுபுறம் பிரசாரம் தீவிரமாக இருக்கவேண்டும். அதுவே தேர்தலுக்கான பார்வையில் அழகாகும்.
    புதுச்சேரி தொகுதியில் பிரதானக் கட்சி வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் வி. வைத்திலிங்கமும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே. நாராயணசாமியும் போட்டியிடுகின்றனர். இவ்விருவருக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
    அண்டை மாநிலமான தமிழகத்தில் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்வது, வேட்பாளர்கள் பிரசாரம், வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் என நடைபெறுகின்றன.
    ஆனால், காரைக்காலில் இதற்கான சூழல் சிறிதும் இருக்கவில்லை. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கே. நாராயணசாமியை அண்மையில் அழைத்துவந்த அக்கட்சித் தலைவர் என். ரங்கசாமி, அதிமுக, பாமக கூட்டத்தில் பங்கேற்று அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார். காங்கிரஸ் தரப்பில் கட்சியின் தேர்தல் பணிக் குழுத் தலைவராக ஆர். கமலக்கண்ணன் தலைமையில் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சட்டப் பேரவைத் தேர்தலைப்போல் வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரிக்கவேண்டும். முதல்வர், அமைச்சர், வேட்பாளர் வரட்டும் என எதிர்பார்க்காமல், கட்சியினர் அந்தந்தப் பகுதி கிளை நிர்வாகிகளுடன் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டவேண்டும் என அறிவுறுத்தினார்.
    அத்துடன், அன்றைய தினம் முதல் தனது தொகுதியான திருநள்ளாறில் கிராமங்களைத் தேர்வு செய்து காலை, மாலை வேளைகளில் வீடு வீடாகச் சென்று அமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.  திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச். நாஜிம், காரைக்கால் மாதா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரார்தனை செய்துவிட்டுத் திரும்பியோரிடம் வாக்குச் சேகரித்தார்.
    இதைத் தவிர காரைக்காலில் உள்ள  திருநள்ளாறு தவிர்த்து மற்ற 4 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டவில்லை.
    இதுகுறித்து, முக்கிய கட்சிகளின் தொண்டர்கள் கூறும்போது, "பிரசாரம் செய்வதற்கு ஏற்ப கட்சியிடமிருந்து துண்டுப் பிரசுரங்கள் புதுச்சேரியிலிருந்து வரவில்லை. செலவுக்கான பணம் குறித்தும் தலைமையிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இப்படி இருக்கும்போது எப்படி இந்த வெயிலில் பிரசாரத்தை நாங்கள் மேற்கொள்ள முடியும் என்றனர்.
    பொதுவாக ஆளும்கட்சி வேட்பாளர் தரப்பிலும், எதிர்க்கட்சி வேட்பாளர் தரப்பிலும் காரைக்காலில் தேர்தலுக்கான வேகம் காணப்படவில்லை. வேட்பு மனு தாக்கலும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. தேர்தலுக்கான கடைசி ஒரு வாரம் பிரசாரம் சூடு பிடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டதாக காரைக்கால் பிராந்திய வாக்குகள் உள்ள நிலையில், கட்சியினர் செயல்பாடுகள் மந்த நிலையில் இருந்து வருவது அரசியல் ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai