எதிர்ப்புக்கு பணிந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை கைவிடக் கூடாது: போராட்டக் குழு வலியுறுத்தல் 

யாருடைய எதிர்ப்புக்கும் பணிந்து நகரில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் கைவிடக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாருடைய எதிர்ப்புக்கும் பணிந்து நகரில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் கைவிடக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.பி. செல்வசண்முகம் இதுகுறித்து கூறியது: காரைக்கால் நகரப் பகுதி சாலைகளில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. வாகனங்களில் செல்ல முடியவில்லை, வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த முடியாமல், வெகுதூரம் சென்று நிறுத்த வேண்டியுள்ளது. காரைக்காலில் உள்ள சாலைகள் போக்குவரத்துக்கு உரியதாக இல்லாமல் வணிகர்களால் அவர்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றப்பட்டுவிட்டது.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு முதலில் காரைக்கால் போராட்டக் குழுதான், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் மக்கள் சிரமம் இல்லாமல் சென்றுவர ஏற்பாடு செய்ய வலியுறுத்தியது. இதுகுறித்து, போராட்டக்குழு போராட்டமும் நடத்தியது. இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  சாலை அகலமாக இருந்தால்தான்,  சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்த முடியும், போராட்டக் குழு கோரிக்கையை ஏற்று அப்போது இருந்த நகராட்சி ஆணையர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். 
அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்ததன் காரணமாக அவரால் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், இப்போதைய நகர நிலவரம் மிக மோசமாகிவிட்டது. அதிக வாகனப் பெருக்கம், வியாபாரிகளின் விதியை மீறிய ஆக்கிரமிப்பு, வாகனங்களை நிறுத்தவே முடியாத நெரிசல் ஏற்பட்டுள்ளது. காரைக்காலில் வணிகர்கள் வியாபாரம் குறைந்துவிட்டதாக கவலைப்படுவதற்கு, மக்கள் சாலையில் செல்ல முடியாததும், வாகனத்தை நிறுத்த முடியாததுமும் முக்கிய காரணமாக இருக்கின்றன என்பதை வணிகர்கள் உணரவேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றமும், அதைத் தொடர்ந்து வளர்ச்சித் திட்டமும் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய திட்டமிடலுடன் ஈடுபட்டிருந்தால் அதை வரவேற்று, அதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் எதிர்ப்புகளுக்கெல்லாம் பணிந்துவிடாமல், சட்ட ரீதியாக எவ்வாறான நடவடிக்கையை எடுக்கவேண்டுமோ அதை செய்யவேண்டும் என போராட்டக் குழு வலியுறுத்துகிறது.
பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்திய சாலைகளில் ஐந்தடி என்கிற நடைபாதை அமைப்பு இருந்தது.  மக்கள் தொகை குறைந்திருந்த காலமாக இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையில் திட்டம் அப்போது செயல்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது அந்த ஐந்தடியை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால், மக்கள் சாலையில் நடந்து செல்லவேண்டிய நிலையும்,  இதனால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதுமாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனையே கருத்தில்கொள்ள வேண்டும். அரசியல் செல்வாக்கு  உள்ளோர் எதிர்ப்புகளுக்கெல்லாம் அஞ்சி பணியை நிறுத்திவிடக்கூடாது. ஆக்கிரமிப்பு அகற்றத்தை தீவிரமாக மேற்கொண்டு, மாவட்ட நிர்வாகம் சாலையை விரிவாக்கம் செய்ய என்ன திட்டம் வைத்திருக்கிறதோ அதையும் உடனடியாக நிறைவேற்றவேண்டும். அவ்வாறு செய்யப்படும்பட்சத்தில் இப்போது எதிர்ப்போரெல்லாம் கால மாற்றத்தில் வளர்ச்சியைப் பார்த்து,  தாம் அப்போது எதிர்த்தது தவறு என உணர்வார்கள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com