முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
உயர் மின்கம்பங்களுக்கு மின் இணைப்புக் கொடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 15th May 2019 08:58 AM | Last Updated : 15th May 2019 08:58 AM | அ+அ அ- |

மேலகாசாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள உயர் மின்கம்பங்களுக்கு, மின் இணைப்புக் கொடுக்க சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் காரைக்கால் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உயர் மின்கம்பங்கள் நிறுவப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
காரைக்கால் நகரப் பகுதியில் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதியில் பொதுப்பணித்துறை நிர்வாகம் மூலம் உயர்மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றுக்கு, மின் இணைப்பு தரப்படுவதிலும், பராமரிப்பு செய்வதிலும் பிரச்னை நீடிப்பதால், பல மின் கம்பங்கள் இணைப்பு இல்லாமலும், இணைப்பு பெற்ற பின்னர் பராமரிப்பின்றி பழுதாகியும், சில இடங்களில் பகல் நேரத்தில் மின் விளக்குகள் ஒளிருவதும் எனஅலட்சியப் போக்கும் நீடிக்கிறது.
ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நிறுவப்பட்ட கம்பத்துக்கு இணைப்புப் பெறவேண்டுமெனில், மின்துறையிடம் உரிய தொகை நிலுவையாக செலுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செலுத்தாத மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாகுடி கிராமம், அகரம் பேட் சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட உயர் மின்கம்பம் (ஹைமாஸ் மின்விளக்கு) இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த மின்கம்பம் அருகே பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற தீமிதித் திருவிழாவின்போது, தற்காலிகமாக மின் இணைப்பு கொடுத்துவிட்டு, பின்னர் துண்டித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோல், பல இடங்களில் மின்கம்பங்கள் மின் இணைப்பு பெறாமல் உள்ளன.
இத்தகைய மின் கம்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.