பருத்தியில் சப்பாத்திப் பூச்சித் தாக்குதலைத் தடுக்க விவசாயிகளுக்கு பயிற்சி: வேளாண் அதிகாரி தகவல்

காரைக்கால் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுவரும் பருத்திச் செடியை சப்பாத்திப் பூச்சித் தாக்குவதாக

காரைக்கால் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுவரும் பருத்திச் செடியை சப்பாத்திப் பூச்சித் தாக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கும் நிலையில், இதைத் தடுக்க விரிவான பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்படுவதாகவும், பயிர்க் காப்பீடும் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி நடைபெற்றுவருகிறது.  குறிப்பாக மாவட்டத்தில் விழுதியூர், பேட்டை, அகலங்கண்ணு, இளையான்குடி, சேத்தூர், புத்தக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி , திருநள்ளாறு, அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
பருத்தி 5 மாத பயிர் என்ற நிலையில், நிகழாண்டு நெல் அறுவடைக்குப் பின்னர் பருத்தி விதைப்பு செய்யப்பட்டது.  தற்போது பூக்கள் பூத்துக் காய்க்கும் பருவத்தில் பருத்தி உள்ளன.  கடுமையான வெயில் ஏற்பட்டுள்ளதால், இதை சாதகமாகப் பயன்படுத்தி சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், இது மகசூலை வெகுவாக பாதிக்கச் செய்யும் என விவசாயிகள் வேதனை
தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியது :  தை, மாசி மாத நெல் அறுவடைக்குப் பின்பு பருத்தி சாகுபடி மேற்கொள்வது வழக்கம்.  தற்போது செடியில் பூப்பூத்துள்ளது. அடுத்து காய்க்கும் பருவத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பொதுவாக கடும் வெயில் இருந்தாலும், கோடை மழை தீவிரமாக பெய்தாலும் பருத்தி பாதிப்பு ஏற்படும். மிகுந்த கவனத்துடன் பணியாற்றினால் மட்டுமே  பயிர் மூலம் லாபத்தை ஈட்டமுடியும். லேசான கோடை மழை இருந்தால் மாவு பூச்சி என்கிற சப்பாத்திப் பூச்சித் தாக்குதலில் இருந்து பருத்தியைக் காப்பாற்ற முடியும்.
 ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. பூச்சித் தாக்குதல் இல்லையென்றால் லாபத்தை ஈட்டும் வகையில் மகசூல் கிடைக்கும். தற்போது மழையில்லாததால் சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்றனர்.
 இதுகுறித்து வேளாண் துறை கூடுதல் இயக்குநர் (பொறுப்பு) முகம்மது தாசீர் புதன்கிழமை கூறியது :  கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு பரவலாக பருத்திப் பயிர் அதிகமான நிலப்பரப்பில் விவசாயிகள் செய்கின்றனர். மழையில்லாததால் மாவுப் பூச்சித் தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு. இது எறும்பு மூலம் செடிக்கு பரவக்கூடியது. இதைக் கட்டுப்படுத்த தேவையான பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, விவசாயிகளுக்கு பகுதி பகுதியாக பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
கொன்னக்காவலி, மேலகாசாக்குடி, தென்னங்குடி, நெடுங்காடு பகுதியில் பயிற்சி தரப்பட்டுள்ளது. பிற இடங்களில் தினமும் இந்த பயிற்சியை வேளாண் துறை அளிக்கிறது. 
இதை அறிந்துகொள்ளும் விவசாயிகள் மாவுப் பூச்சித் தாக்குதலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர். தவிர, பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு ஹெக்டேருக்கு மாநில அரசு ரூ.15 ஆயிரம், மத்திய அரசு ரூ.15 ஆயிரம் வீதம் பிரீமியம் செலுத்தி, காரைக்கால் பருத்தி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி 10 கிலோ மகசூலில் இழப்பு ஏற்பட்டால்கூட காப்பீடு மூலம் இழப்பீட்டைப் பெறமுடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com