திருநள்ளாறு கோயில் தேரோட்டத்துக்கான தேர்க்கால் முகூர்த்தம்

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவ தேரோட்டத்தையொட்டி, தேர்க் கட்டுமானத்தின்

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவ தேரோட்டத்தையொட்டி, தேர்க் கட்டுமானத்தின் தொடக்கமாக தேர்க் கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவம் மே 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக சார்புக் கோயில்களான ஐயனார், பிடாரி, மாரியம்மன் கோயில் உத்ஸவங்கள் நடைபெறும். கடந்த மே 10-ஆம் தேதி ஐயனார் கோயில் கொடியேற்றம் செய்யப்பட்டு 5 நாள் உத்ஸவம் நடைபெற்றது. அடுத்து, 16-ஆம் தேதி பிடாரியம்மன் கோயில் உத்ஸவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்துக்கு முன்பாக இக்கோயில்களில் உத்ஸவம் நடந்து முடிந்துவிடும். பிரமோத்ஸவத்தில் தேரோட்டம் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெறும். தேரோட்டம் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சுவாமிக்கு பெரியத் தேரும், அம்பாளுக்கு அடுத்த அளவில் சிறிய தேரும், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் தனித்தனியே வீற்றிருக்கும் 5 தேர்கள், தேரோட்டத்தில் ஈடுபடுத்தப்படும். இவ்விழாவையொட்டி, தேர்க் கட்டுமானத்துக்காக தேர்க்கால் முகூர்த்தம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்க் காலுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகாரம் கொண்டு செல்லப்பட்டு சன்னிதி வழியே தேர் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி ஜே. சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்புடன் தேர்க் கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில், திருநள்ளாறு கோயிலுக்கு வந்த பக்தர்கள், உள்ளூர்மக்கள் பலர் கலந்துகொண்டனர். 5 தேர்களின் அலங்காரப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
தியாகராஜர் உன்மத்த நடனமாடும் இக்கோயில் தேரோட்டம் புகழ்பெற்றது. தேரில் வீற்றிருக்கும் சுவாமி, அம்பாளை தரிசிப்பது பக்தர்களுக்கு சிறந்த பலனைத் தரும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளதால், திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துத்தர கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com