மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்
By DIN | Published On : 20th May 2019 08:39 AM | Last Updated : 20th May 2019 08:39 AM | அ+அ அ- |

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு நேர்காணல் நடத்தி பணி ஆணை வழங்கியது.
புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் மூலம் மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், தனியார் நிறுவனத்தை அழைத்து நேர்காணல் நடத்தியது.
இதில் மகளிர் தொழிநுட்பக் கல்லூரி, கொற்கை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, தொன் போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சென்னையில் செயல்பட்டுவரும் ஜப்பான் நாட்டு நிறுவனமான ஜாய்சன் சேஃப்டி சிஸ்டம் என்கிற நிறுவனத்தினர் நேர்காணலை நடத்தினர். இந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் (உற்பத்தி) கார்த்திகேயன், மனிதவளப் பிரிவு முதுநிலை பிரதிநிதி சுந்தர்ராமன் ஆகியோர் பங்கேற்று பணியின் தன்மை, ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கினர்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர். காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட 20 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிறுவனத்தின் சார்பில் காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.பாபு அசோக் பணி நியமன ஆணையை வழங்கினார்.
முகாமுக்கான ஏற்பாடுகளை முதல்வர் பாபு அசோக், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் அதிகாரி எஸ்.எல்.டெல்காஸ் ஆகியோர் செய்திருந்தனர்.