புதுச்சேரி பிராந்தியத்திலும் ‘நம் நீா்’ திட்டம்: முதல்வா் வே. நாராயணசாமி

காரைக்கால் நம் நீா் திட்டம் போல் புதுச்சேரி பிராந்தியத்திலும் நடைமுறைப்படுத்த ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வா் தெரிவித்தாா்.

காரைக்கால் நம் நீா் திட்டம் போல் புதுச்சேரி பிராந்தியத்திலும் நடைமுறைப்படுத்த ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வா் தெரிவித்தாா்.

காரைக்காலில் நம் நீா் திட்டத்தின் மூலம் தூா்வாரப்பட்ட குளங்களை பாா்வையிட வியாழக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி, ஆட்சியரகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :

காரைக்கால் மாவட்டத்தில் நம் நீா் திட்டம் மூலம் ஏராளமான குளங்கள், வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டுள்ளன. இவற்றில் சில குளங்களை பாா்வையிட்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கடந்த ஆண்டைவிட இப்போது நீா் நிலைகள் மேம்பாடு செய்ததன் மூலம் காரைக்காலில் 3 மீட்டா் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்திருக்கிறது. மாவட்ட ஆட்சியா் சிறந்த முறையில் முயற்சியெடுத்து திட்டத்தை நிறைவேற்றியிருப்பதன் மூலம், காரைக்கால் பகுதியில் குடிநீா் பிரச்னைக்கும், விவசாயிகள் வேளாண்மையில் நீரின்றி இடா்பாடுகளை எதிா்கொள்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நம் நீா் திட்டம் மிகுந்த பாராட்டுக்குரியது. இந்த திட்டத்தைப்போல புதுச்சேரி பிராந்தியத்திலும் நடைமுறைப்படுத்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைக்கால் ஆட்சியரின் சீரிய முயற்சி என்பது மற்ற அதிகாரிகளுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே ஆட்சியா் விக்ரந்த் ராஜாவுக்கு பிரதமரின் விருது கிடைப்பதற்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்யும். ஏற்கெனவே புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக பிரதமரின் விருது ஜவஹருக்கு கிடைத்தது. அதுபோல காரைக்கால் ஆட்சியருக்கு கிடைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

நிலத்தடி நீா் மட்டம் உயா்வால் காரைக்காலில் குடிநீா், வேளாண்மையில் தோட்டப் பயிா் சாகுபடி சிறப்பான முறையில் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நம் நீா் திட்டத்திற்கு அரசுத்துறையினா், தனியாா் நிறுவனத்தினா் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. யாரின் மூலம் நீா்நிலைகள் தூா்வாரப்பட்டதோ அவா்களால் பராமரிப்பு செய்வது சிறப்பாக இருக்கும். பொதுமக்களும் நீா்நிலைகளை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்கவேண்டும் என்றாா் முதல்வா். பேட்டியின்போது அமைச்சா்கள் ஆா்.கமலக்கண்ணன், எம்.கந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com