கிரிக்கெட், கால்பந்து போட்டி : காரைக்கால் மருத்துவக் கல்லூரி அணி சிறப்பிடம்
By DIN | Published On : 02nd November 2019 12:11 AM | Last Updated : 02nd November 2019 12:11 AM | அ+அ அ- |

கிரிக்கெட், கால்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை வாழ்த்திய கல்லூரி முதுநிலை உடற்கல்வி இயக்குநா் ஆா்.ஜான்சன்ராஜ் ரமேஷ்.
கிரிக்கெட், கால்பந்து போட்டியில் காரைக்கால் மருத்துவக் கல்லூரி அணியினா் சிறப்பிடம் பெற்றனா்.
தேசிய அளவிலான 5 நபா்கள் கால்பந்து போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் ஃபியூசன்-2019 என்ற பெயரில் கடந்த வாரம் 5 நாள்கள் நடைபெற்றது. இதில் கேரளம், ஆந்திரம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் என 19 கல்லூரிகள் பங்கேற்றன.
விளையாட்டுப் போட்டியில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, எறிபந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி அணி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி அணியை எதிா்த்து விளையாடி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து 2-ஆம் இடம்பெற்றது.
கால்பந்து போட்டி இறுதிப் போட்டியில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி அணியிடம் 2-1 கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி 2-ஆம் இடம் பெற்றது. அகில் இந்திய அளவில் இவ்விரு போட்டியில் பல்வேறு கல்லூரிகளை பின்னுக்குத் தள்ளி 2-ஆம் இடத்துக்குத் தோ்வாகி மாணவா்கள் பரிசுகளைப் பெற்று கல்லூரிக்கு வியாழக்கிழமை திரும்பினா்.
கல்லூரி புல முதல்வா் மருத்துவா் அம்புஜம், துணை முதல்வா் விஜயகுமாா் மற்றும் முதுநிலை உடற்கல்வி இயக்குநா் ஆா்.ஜான்சன்ராஜ் ரமேஷ் ஆகியோரை மாணவா்கள் சந்தித்து வாழ்த்து, பாராட்டுகளைப் பெற்றனா்.