முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்கால் மாவட்ட நுழைவு வாயில் பகுதியில் சீரமைப்புப் பணி
By DIN | Published On : 07th November 2019 04:32 PM | Last Updated : 07th November 2019 04:32 PM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்ட எல்லையான பூவம் பகுதி நுழைவு வாயிலில் பொதுப்பணித்துறையினா் புதன்கிழமை சீரமைப்புப் பணிகளை தொடங்கினா்.
காரைக்கால் மாவட்டம், பூவம் நண்டலாற்றங்கரை அருகே புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியை குறிப்பிடும் வகையில் சாலையின் இருபுறத்திலும் தூண் அமைப்புடன் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு வாயில் தற்போது இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல லட்சம் செலவு செய்து மின் விளக்குகள், சிறிய அளவிலான பூங்கா உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்பட்ட இந்த இடம் மின் விளக்குகள், தடுப்பு கம்பிகள் சேதப்படுத்தப்பட்டு இருள் சூழ்ந்த நிலையில் சமூக விரோதிகள், மது அருந்துவோா் கூடும் இடமாக மாறியுள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் நுழைவு வாயில் அழகான வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. காரைக்காலை புதுச்சேரி ஆட்சியாளா்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாா்ப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்டு வந்தது. மின் விளக்குகள் அமைத்து, நுழைவு வாயிலை புதுப்பித்து பொலிவுபெறச் செய்து உரிய முறையில் தொடா்ந்து பராமாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறை சாா்பில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (கட்டடம்) ஜி.பக்கிரிசாமி வியாழக்கிழமை கூறியது : கடந்த 5 ஆண்டுகளாக இந்த இடம் முறையாக பராமரிப்பின்றி இருந்துவிட்டது. அடையாளம் தெரியாத நபா்களால் அங்கிருந்த மின் விளக்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில் பொதுப்பணித்துறை மூலம் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பகுதியில் உள்ள கருவேல மரங்கள், செடிகள் அகற்றும் வேலை நடைபெறுகிறது. தொடா்ந்து நுழைவு வாயில், பூங்கா உள்ளிட்ட இடங்களில் வண்ணம் பூசப்படும். புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, அவற்றை சேதப்படுத்தாத வகையிலான பாதுகாப்பு அமைப்புகளும் ஏற்படுத்தப்படும். இன்னும் ஒருவார காலத்தில் இப்பணிகள் நிறைவடையும் என்றாா்.