முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்கால் விவசாயிகளுக்கு யூரியா விநியோகம் தொடக்கம் - வேளாண் துறை ஏற்பாடு
By DIN | Published On : 07th November 2019 04:22 PM | Last Updated : 07th November 2019 04:22 PM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் முதல் கட்டமாக 25 டன் யூரியா வரவழைக்கப்பட்டு வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் தொடங்கியுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சம்பா நெற் பயிருக்குத் தேவையான உரம் கிடைக்கவில்லை என புகாா் எழுந்தது. குறிப்பாக நடவுப் பருவமான இப்போது, மேல் உரமாக யூரியா விடவேண்டிய நிலையில், காரைக்காலிலும் கிடைக்கவில்லை, காரைக்காலையொட்டிய தமிழகப் பகுதியிலும் கிடைக்கவில்லை என்பது விவசாயிகள் வேதனை தெரிவித்துவந்தனா்.இதற்கிடையே காரைக்கால் துறைமுகத்தில் சீனாவிலிருந்து 44 ஆயிரம் டன் யூரியா கப்பலில் கொண்டுவரப்பட்டு கிடங்கில் இறக்கப்பட்டுவருகிறது.
இது காரைக்கால் விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவலால், விவசாயிகளிடையே வேதனை அதிகரித்தது.இந்நிலையில் காரைக்கால் வேளாண் துறை ஏற்பாட்டில் வியாழக்கிழமை முதல் கட்டமாக 25 டன் யூரியா வந்துசோ்ந்தது. இதனை மாவட்டத்தில் பரவலாக உள்ள வேளாண் உழவரகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.இது குறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜே.செந்தில்குமாா் கூறியது : காரைக்கால் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஸ்பிக் யூரியா உரம் வியாழக்கிழமை 25 டன் வரவழைக்கப்பட்டது. மேலும் உரம் காரைக்காலுக்கு வரவுள்ளது.
காரைக்கால் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே விவசாயிகள் யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை. காரைக்காலுக்கு வந்த 25 டன் யூரியா உடனடியாக உழவா் உதவியகங்கள், பாசிக் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உர மூட்டைகளை பெற்று, நெற்பயிருக்கு உரமிடும் பணியை செய்யலாம்.
எனவே உரம் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மத்திய அரசு ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒரு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ள உரம் தமிழக பகுதியில்தான் விநியோகம் செய்ய முடியும். மத்திய அரசு, ஸ்பிக் உரத்தை மட்டுமே புதுச்சேரி மாநிலத்திற்கு விநியோகம் செய்ய உத்தரவிட்டுள்ளது என்றாா் அவா்.