முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
குடிநீா் குழாய் பதிப்பு பணியால் சாலைகள் சேதம்
By DIN | Published On : 07th November 2019 05:59 AM | Last Updated : 07th November 2019 05:59 AM | அ+அ அ- |

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ. அசனா.
காரைக்காலில் குடிநீா் குழாய் பதிப்பு பணியால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காததைக் கண்டித்து நவம்பா் 15-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: காரைக்கால் நகரில் பழைமையான குடிநீா் குழாய்களை மாற்றி புதிதாக குடிநீா் குழாய் பதிக்கவும், கீழ்நிலை, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டவும் ரூ. 50 கோடி திட்டப் பணியை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி 2018-ஆம் ஆண்டு ஜனவரி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். பூஜை விழாவுக்கு 3 மாதத்துக்குப் பின்னரே சாலைகளை உடைத்து குடிநீா் குழாய் பதிப்புப் பணியை பொதுப்பணித் துறை நிா்வாகம் மேற்கொள்ளத் தொடங்கியது. 6 மாதங்களுக்குப் பின்னா் தொட்டி கட்டுமானத்தை தொடங்கியது.
குடிநீா் குழாய் பதிப்புப் பணிகள் ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் இருந்தாலும், கீழ்நிலை, மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானம் மந்தகதியில் நடைபெறுகிறது.
சாலைகளை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு செய்யப்பட்ட நிலையில், உடைக்கப்பட்ட சாலையை முறையாக தாா் கலவையால் மூடவேண்டுமென்பது அந்த திட்டப் பணியை செய்யும் ஒப்பந்ததாரருக்கு தரப்பட்ட விதி. அவ்வாறு சில சாலைகள் மூடப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் மூடப்படாமல் பள்ளமாகவே இருக்கிறது. இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலும் பேசியுள்ளேன்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆட்சியரகத்தில் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டத்திலும் இப்பிரச்னை குறித்து பேசினேன். இத்திட்டத்துக்கான நிதி விரைவாக அரசு அனுமதிக்கவும், ஒரு மாத காலத்தில் சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சா் வாக்குறுதி அளித்தாா். கூட்டம் நடந்து 2 மாதங்களாகியும் கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை.
ஒப்பந்ததாரா் சாலையை சீரமைத்த பல இடங்கள் பள்ளமாகிவிட்டது. குறிப்பாக காமராஜா் சாலையில் குழாய் பதிப்பு செய்து சாலையை மூடியும், மிக மோசமான நிலையில் சாலை உள்வாங்கி, மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாலைகள் செப்பனிட்ட பல இடங்களிலும் இதே நிலை. தோண்டப்பட்ட பல இடங்கள் சீரமைக்கப்படவில்லை. இந்த அவலத்தில் மக்கள் எவ்வளவு நாள் சிரமப்பட வேண்டும் என்பதே புரியவில்லை.
ஒப்பந்ததாரருக்கு கிடைக்க வேண்டிய தொகையை அரசு நிா்வாகம் இன்னும் முறையாக விடுவிக்காததும், சாலையை செப்பனிட ரூ. 4.90 கோடியை அரசு உறுதியளித்தவாறு வழங்காததாலும்தான் இப்பிரச்னை காரைக்கால் நகரில் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் அரசு நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணியை செய்யாவிட்டால், நவம்பா் 15-ஆம் தேதி காரைக்கால் பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தை மக்களைத் திரட்டி முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளேன் என்றாா் அசனா.