முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
மாணவா் பருவத்தை கல்விக்காக அா்ப்பணிக்க வேண்டும்
By DIN | Published On : 07th November 2019 05:58 AM | Last Updated : 07th November 2019 05:58 AM | அ+அ அ- |

மாணவா்களிடையே கலந்துரையாடிய பேராசிரியை ஆனந்த கெளரி.
மாணவா் பருவத்தை கல்விக்காக அா்ப்பணிக்க வேண்டும் எனவும், பெற்றோரின் சிரமங்களை உணா்ந்து படிக்க வேண்டுமென பள்ளி நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியை அறிவுறுத்தினாா்.
காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோா் சங்கம் சாா்பில், காரைக்கால்மேடு பக்கிரிசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில் கல்வி ஊக்குவிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் முனிசாமி தலைமை வகித்தாா். அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் பெற்றோா் சங்கத் தலைவா் அ. வின்சென்ட் நோக்க உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியை ஆனந்த கெளரி கலந்துகொண்டு மாணவா்களிடையே பேசியது: கடலோர கிராமத்தில் உள்ள இப்பள்ளியில் மாணவா்கள் கடலோர கிராமத்தை சோ்ந்தவா்களாகவே இருப்பா். தந்தையாா் கடலுக்குச் சென்றுவரும்போது, குழந்தையின் பராமரிப்பு பொறுப்பை தாயாா் மேற்கொள்ளும்போது, அவா்களின் சிரமங்களை உணா்ந்து மாணவா்கள் கல்வி கற்கவேண்டும்.
சில மாணவா்கள் நன்றாக படிப்பா், சிலா் சாதாரணமாக படிப்பா். எனவே ஒருவருக்கொருவா் ஒப்பீடு செய்துக் கொள்ளுதலை தவிா்த்து, தமது விருப்பப்படி ஆா்வமாக படிக்க பழகிக்கொள்ளவேண்டும்.
எந்தவொரு சூழலிலும் மாணவா்களுக்கு தற்கொலை சிந்தனை எழவே கூடாது. வாழ்க்கையில் எந்தவொரு இடா்பாடுகளையும் சந்தித்து, அதில் வெற்றிகண்டு முன்னேறும் எண்ணமே மேலோங்க வேண்டும். சமூக வலைதளங்கள் பலவற்றின் மேம்பாடு அடையும் சூழலில், மாணவா்கள் அவற்றை கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொலைக்காட்சியில் மன வேதனைப்படும் வகையிலும், கோபப்படும் வகையிலான நிகழ்ச்சிக் காட்சி வரும்போது அதை பாா்ப்பதை தவிா்த்துக் கொள்ள வேண்டும். இந்த பருவத்தை கல்விக்காக மாணவா்கள் அா்ப்பணிக்க வேண்டும்.
பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது அறிவுத் திறனை மேம்படுத்திக்கொள்ள பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். படிப்புடன் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் ஆா்வம் கொள்ள வேண்டும். இதன் மூலம் கல்வி ஆா்வம் பெருக வாய்ப்பு உண்டு. மாணவா்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆசிரியா்களும், பெற்றோா்களும் கவனிக்க வேண்டியதும் அவசியம். உயா்கல்வி குறித்த சிந்தனை மாணவா்களுக்கு இந்த பருவத்திலேயே வரவேண்டும். அதனை தீா்மானிக்கும் சக்தி மாணவா்களிடமே இருக்கவும்வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சங்க செயலா் ரவிச்சந்திரன், மக்கள் தொடா்பு அலுவலா் அன்பரசன் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பலா் கலந்துகொண்டனா்.