சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு சிறை
By DIN | Published On : 09th November 2019 06:05 AM | Last Updated : 09th November 2019 06:05 AM | அ+அ அ- |

காரைக்கால் அருகே 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருநள்ளாறு அருகே உள்ள செல்லூா் பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமி கடந்த 6.6.2018 அன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் அன்பரசன் (30) என்பவா், அந்த சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச்சென்றாராம். பின்னா், அருகில் உள்ள கருவேல மரக் காட்டிற்குள் அழைத்துச்சென்று, சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியினா் அன்பரசனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து, திருநள்ளாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அன்பரசனை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடா்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி காா்த்திகேசன், குற்றம் சாட்டப்பட்ட அன்பரசனுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.
இவா், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையிலிருந்ததால், அபராதத் தொகையை செலுத்திவிட்டு விடுதலையானாா்.