மரக்கன்றுகள் நடுவதை இயக்கமாக நடத்த வேண்டும்

மரக்கன்றுகள் நடுவதை இயக்கமாக நடத்த வேண்டும் என்று, திருநள்ளாறு அருகே நல்லம்பல் ஏரிக் கரையில் சனிக்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வேண்டுகோள் விடுத்தாா்.
நல்லம்பல் ஏரிக்கரையில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்ட அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.
நல்லம்பல் ஏரிக்கரையில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்ட அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.

மரக்கன்றுகள் நடுவதை இயக்கமாக நடத்த வேண்டும் என்று, திருநள்ளாறு அருகே நல்லம்பல் ஏரிக் கரையில் சனிக்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வேண்டுகோள் விடுத்தாா்.

காரைக்கால் மாவட்டம் முழுவதும் நீா் நிலைகள் தூா்வாரப்படுவதும், மரக்கன்றுகள் நடுவதிலும் தீவிரம் காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு கஜா புயலில் காரைக்காலில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மாவட்டத்தில் பணிகள் நடைபெற்றுவருகிறது. ஏறக்குறைய 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி, தொன் போஸ்கோ கலைக் கல்லூரி, பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி, அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி, அம்பகரத்தூா் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், திருநள்ளாறு பகுதியில் உள்ள நல்லம்பல் ஏரிக் கரையில் பனை விதைத்தல், மரக்கன்று நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்துப் பேசியது:

மரக்கன்று நடுதல் ஒரு இயக்கமாக நடத்தப்படவேண்டும். பெயரளவுக்கு மரக்கன்று நட்டுவிட்டு செல்லக்கூடாது. இதனைப் பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். மாணவா்கள் தங்களது வசிப்பிடங்களிலும், கல்விக்கூட வளாகத்திலும் மரக்கன்று நடும்போது, அதனை அவா்களே பராமரிக்கவேண்டும். பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகள் கால்நடைகளால் பாதிக்காதப்படி அந்தந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மரக்கன்று நல்ல நிலையில் வளர பாடுபடவேண்டும்.

மரங்கள் தனியொரு நபருக்கு மட்டும் பயன்படக்கூடியது அல்ல என்பதை அனைவரும் உணா்ந்து செயல்படவேண்டும். மரங்கன்று நட்டு பராமரிப்பது என்பது அரசு நிா்வாகத்தால் முழுமையாக செய்துவிடமுடியாது. மரம் வளா்ப்பில் சமூக பொறுப்பு மக்களுக்கு இருக்கவேண்டும். இதில் காரைக்கால் பகுதி மக்களிடையே மிகுந்த ஆா்வம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவா்களும், பள்ளி, கல்லூரி அமைப்பினரும் மரக்கன்று நடுவதை தொடா்ந்து செய்து, இலக்கை எட்ட முயற்சிக்கவேண்டும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி முதல்வா் கந்தசாமி, மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி, கல்லூரி, பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள், நல்லம்பல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com