காட்சிப் பொருளான காரைக்கால் உழவர் சந்தை: மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை

காரைக்காலில் பயன்பாடின்றி உள்ள உழவர் சந்தைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக்..
vk_19_aadu_santhai_1910chn_36_6
vk_19_aadu_santhai_1910chn_36_6

காரைக்காலில் பயன்பாடின்றி உள்ள உழவர் சந்தைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடியை மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ள காரைக்கால் மாவட்டத்தில் தற்போது, காவிரி நீர் வந்தால் மட்டுமே விவசாயம் என்றாகிவிட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பிராந்தியத்தில் ஆற்றோரத்தில் உள்ள கிராமங்களில் தோட்டப் பயிர் சாகுபடி ஓரளவு செய்யப்பட்டு, காய்கனிகள் உள்ளூரில் சந்தைப்படுத்தப்பட்டன.

குறிப்பாக விழுதியூர், பேட்டை, அத்திப்படுகை, காக்கமொழி, நிரவி, கீழமனை, அகலங்கன்னு, செல்லூர், கோட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் தோட்டப் பயிர் சாகுபடி நடைபெற்றது. நீராதாரம் குறைந்துப்போனதால் படிப்படியாக இந்த பகுதிகளில் தோட்டப் பயிர் சாகுபடி என்பதும் இல்லாமல் போய்விட்டது. நிலத்தடி நீரைப் பயன்படுத்தியும், மழை மற்றும் காவிரி நீர் வருவதைப் பயன்படுத்தியும் சில பகுதிகளில் காய்கறி சாகுபடி நடைபெற்று சந்தைக்கு வருகிறது.

உழவர் சந்தை:

விவசாயிகள் விளைவிக்கும் காய்}கனிகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களே நுகர்வோர்களுக்கு விற்பனை செய்தால், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருதரப்பினருக்குமே நியாயமான விலைக் கிடைக்கும் என்ற நோக்கத்தில், காரைக்கால் பேருந்து நிலையம் எதிரில் கடந்த 2011}ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் வெ. வைத்திலிங்கம் உழவர் சந்தையை திறந்துவைத்தார். 

தொடக்கக் காலத்தில் நல்லமுறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் விவசாயிகள் காய்கறிகள் கொண்டுவருவது குறைந்ததால், சந்தை வளாகம் மூடப்பட்டு, அதன் வாயிலில் சிலர் மீன் வியாபாரம் செய்துவருகின்றனர்.

இதேபோல், விற்பனைக் குழு வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தை தொடங்கப்பட்டது. தற்போது, ஓரிருவர் மட்டுமே தங்களது பகுதியில் விளைந்த காய்கறிகளை கொண்டுவந்து விற்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் காரைக்காலில் உழவர் சந்தை வளாகங்கள் காட்சிப் பொருளாகவே உள்ளன.

தோட்டப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்...  நிகழாண்டு போதுமான தண்ணீர் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இதைப் பயன்படுத்தி, கிராமப்புற தோட்டப் பயிர் சாகுபடியாளர்களை ஊக்குவிக்க காரைக்கால் வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த பருவத்தில் எந்தெந்தப் பயிர் சாகுபடி செய்யலாம், அரசின் ஆதரவு என்ன என்பதை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறுவதுடன், அதற்கான விதை, கன்றுகளை மானிய விலையில் தருவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும். 5 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டொன்றுக்கு சம்பா, தாளடி மூலம் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதோடு, காய்கறி உற்பத்தியைப் பெருக்கவும் வேளாண் துறை உரிய ஊக்கத்தை அளிக்கவேண்டும். 
இதன் மூலம் தினமும் சுமார் 100 விவசாயிகள் உழவர் சந்தைப் பகுதியில் தமது உற்பத்தியை விற்பனைக்குக் கொண்டுவர முடியுமென வேளாண் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வேளாண் அமைச்சர் கவனத்துக்கு...

பொதுவாகவே காய்கறிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டில் உற்பத்தியாகி விற்பனைக்கு வருகிறது. 
இயற்கையான உரப் பயன்பாட்டில் உற்பத்தி குறைந்துவிட்டது. தோட்டப் பயிர் சாகுபடியாளர்களை ஊக்கப்படுத்தும்போது, இயற்கை முறையிலான  உற்பத்தி கிடைக்க வாய்ப்புண்டு. காரைக்கால் பகுதியில் கத்திரி, வெண்டை, புடலை, கீரை வகைகள், தக்காளி, பீக்கங்காய், பாகற்காய், சுரைக்காய், பரங்கி, அவரை, சுண்டைக்காய், எலுமிச்சை, நார்த்தங்காய் போன்றவை பயிரிட ஏற்ற மண் வளம் உள்ளது.

நிகழாண்டு கிடைத்திருக்கும் நீரைக்கொண்டு, தோட்டப் பயிர் சாகுபடியையும், மாடித் தோட்டம் அமைப்பு காய்கறி உற்பத்திக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் காரைக்காலைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். 2 உழவர் சந்தைகளையும் மேம்படுத்தி வருமாண்டு முற்பகுதியில் சந்தைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் உள்ளூர் தோட்டப் பயிர் சாகுபடியாளர்கள் நல்ல விலைக்கு தங்கள் உற்பத்தியை விற்று லாபமீட்டுவர்.  
எனவே, இதன் மீது அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த பலரும் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து பேட்டையைச் சேர்ந்த காய்கறி உற்பத்தியாளரும், இயற்கை வேளாண் ஆர்வலருமான முருகபூபதி கூறியது:

பேட்டை பகுதியில் உள்ள எங்களது நிலத்தில் இப்போதும் கத்திரி, புடலை, கீரை வகைகள், பீக்கன் உள்ளிட்டவைகளை விளைவித்து, மார்க்கெட்டுக்கு அனுப்பிவருகிறோம். தற்போது, இயற்கை விவசாயத்தில் விளையும் பொருள்களை வாங்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால், இயற்கை விவசாய முறையில் பயிர் சாகுபடி, மாடித் தோட்டம் அமைத்தல் போன்றவற்றில் பலரும் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 

எனவே, வேளாண் துறை அதிகாரிகள், சரியான முறையில் விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதோடு,  உழவர் சந்தைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் மக்களின் வரவேற்பு மிகுதியாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியது:

உணவுப் பொருள்கள் யாவும் ரசாயன உரங்கள் பயன்பாட்டால் விஷத் தன்மையுடையதாக மாறிவிட்டன. இதனால், இயற்கை வேளாண் உற்பத்தி பொருள்கள் மீது மக்களுக்கு அதீத விருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அதற்கான உற்பத்திக்கேற்ற தளமாக காரைக்கால் இருந்தும், உற்பத்தியாளர்களிடம் முயற்சிகள் இல்லை. அண்மையில், பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பாரம்பரிய நெல் ரகங்கள் பலவற்றை காட்சிப்படுத்தி கண்காட்சி நடத்தியதைக் காணக்கூட காரைக்கால் விவசாயிகள் பெரும்பான்மையினர் வரவில்லை.

வேளாண் துறையானது இயற்கை விவசாயிகள், தோட்டப் பயிர் சாகுபடியாளர்களைக் கணக்கெடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தி தோட்டப் பயிர் சாகுபடியை வரும் 2020}ஆம் ஆண்டு தொடக்கம் முதல் காரைக்காலில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். 
தமிழகத்தின் பல பகுதிகள், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தோட்டப் பயிர் சாகுபடியை நேரில் பார்த்துவந்த அமைச்சர், தோட்டப் பயிர் சாகுபடியாளர்களை அந்த பகுதிகளுக்கு அழைத்துச்சென்று அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். 

காரைக்காலைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் தமது காலத்தில் காரைக்காலில் தோட்டப் பயிர் சாகுபடியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால், அது மக்களுக்கு பெரும் சாதகத்தையும், உற்பத்தியாளர்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும் தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com