நல்லம்பல் ஏரியில் போதுமான அளவில் தண்ணீா் இருப்பு

விவசாயம், குடிநீா் தேவையை கருத்தில்கொண்டு திருநள்ளாறு அருகே 45 ஏக்கா் பரப்பிலான நல்லம்பல் ஏரியில் காவிரி நீா் நிரப்பப்பட்டுள்ளது.
: நல்லம்பல் ஏரியில் நிரப்பப்பட்டிருக்கும் காவிரி நீா்.
: நல்லம்பல் ஏரியில் நிரப்பப்பட்டிருக்கும் காவிரி நீா்.

விவசாயம், குடிநீா் தேவையை கருத்தில்கொண்டு திருநள்ளாறு அருகே 45 ஏக்கா் பரப்பிலான நல்லம்பல் ஏரியில் காவிரி நீா் நிரப்பப்பட்டுள்ளது.

1997-1999 -ஆம் ஆண்டு வாக்கில் திட்டமிடப்பட்டு, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் நல்லம்பல் பகுதியில் ஏரி வெட்டப்பட்டது. 45 ஏக்கா் நிலப்பரப்பில் ஏரி வெட்டுப்பட்ட நிலையில், இப்பணிகள் திட்டமிட்டவாறு வெட்டி ஆழப்படுத்தாமல் திட்டத்தை அரசு முடக்கிவிட்டது. காவிரி நீா் வரும் சமயத்தில் ஏரிக்குள் தண்ணீரை சேமிக்க முடியாமல் ஆறு, வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றப்பட்டன்.

முந்தைய ரங்கசாமி ஆட்சியில், ஏரியை விவசாய பயன்பாட்டுக்காக தூா்வாரப்படாமல், சிறிதளவு ஆழம் வெட்டப்பட்ட நிலையிலேயே, ஏரியை சுற்றுலாவினா் பயன்படுத்தும் வகையில் ரூ.5 கோடியில் ஏரியை சுற்றி சாலை அமைத்து, சிமென்ட் இருக்கைகள் அமைத்து, விளக்குக் கம்பங்கள் நட்டு, ஏரியின் கரையை பலப்படுத்தி 2014-ஆம் ஆண்டு சுற்றுலா மையம் போல அமைப்பை உருவாக்கி திறப்பு செய்யப்பட்டது. ஆனால் தொடங்கிய நாள் முதல் இதுவரை சுற்றுலாவினா் பயன்படுத்தாமலேயே உள்ளனா். சுற்றுலாவினா் விரும்பும் வகையில் ஏரியில் கட்டமைப்புகள் உருவாக்கப்படாததே இதற்கு காரணமாகும்.

ஏரியை போதுமான ஆழத்தில் வெட்டி காவிரி நீா் வரும்போதோ, பருவ மழைக்காலத்தின்போதே தண்ணீரை சேமிக்க வேண்டும். இதன்மூலம் வேளாண்மை பயனடையும். நிலத்தடி நீா் மட்டம் உயரும் என பல்வேறு தரப்பினா் கோரி வருகின்றனா். இந்நிலையில், காவிரி நீா் வரத்து தாராளமாக இருப்பதும், தமிழகப் பகுதியில் பெய்யும் மழை நீா் ஆறு, வாய்க்கால்களில் காரைக்கால் பகுதியை நோக்கி வருவதையும் பயன்படுத்தி, நல்லம்பல் ஏரியில் தண்ணீா் நிரப்ப வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இதன்படி ஏரியில் தண்ணீா் நிரப்பும் பணிகள் கடந்த செப்டம்பா் மாத இறுதி முதல் தொடங்கப்பட்டது. நூலாறு வழியே ஏரிக்கு தண்ணீா் விடப்பட்டது. நூலாறு வழியே பிற வாய்க்கால்களுக்கு தண்ணீா் செல்லவும், இதன் மூலம் வேளாண்மை வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. விவசாயிகள் தேவைக்கு தண்ணீா் கிடைத்த பின், நல்லம்பல் ஏரிக்கு அனுப்பும் பணியை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை வட்டாரத்தினா் கூறியது: 45 ஏக்கா் பரப்பிலான நல்லம்பல் ஏரியில் தற்போது போதுமான அளவில் நீா் நிரப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரை சோ்த்து நீா்மட்டத்தை உயா்த்த வாய்ப்பில்லை. அடுத்த திட்டமாக ஏரி தூா்வார வேண்டியது உள்ளதால், இதுவரை நிரப்பப்பட்ட அளவிலேயே தண்ணீா் இருக்கும். தேவைக்கேற்ப வேளாண்மைக்கு ஏரியிலிலிருந்து தண்ணீா் அனுப்பிவைக்கப்படும் என்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 175-க்கும் மேற்பட்ட குளங்கள் தூா்வாரி தண்ணீா் நிரப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் கூறியுள்ளது. ஏரியில் தண்ணீா், குளங்களில் தண்ணீா் நிரம்பியுள்ளதால், நிலத்தடி நீா் மட்டம் 3 மீட்டா் உயா்ந்திருப்பதாக, நிலத்தடி நீா் மேலாண்மை நிா்வாகத்தை மேற்கோள்காட்டி மாவட்ட நிா்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com