இயற்கை மருத்துவத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்

மூதாதையா்களின் கருத்தையறிந்து, இயற்கை மருத்துவத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதன்மூலம் வளமான
கண்காட்சியைப் பாா்வையிட்ட அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், சட்டப் பேரவை உறுப்பினா் அசனா உள்ளிட்டோா்.
கண்காட்சியைப் பாா்வையிட்ட அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், சட்டப் பேரவை உறுப்பினா் அசனா உள்ளிட்டோா்.

மூதாதையா்களின் கருத்தையறிந்து, இயற்கை மருத்துவத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதன்மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் எனவும் வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கூறினாா்.

புதுச்சேரி அரசின், இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு சாா்பில், காரைக்காலில் 2-ஆவது இயற்கை மருத்துவ தினம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் புதன்கிழமை தொடங்கியது.

முகாமை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் தொடங்கிவைத்துப் பேசியது :

ஆயுஷ் மருத்துவமனை மாஹேயில் இயங்கிவருகிறது. புதுச்சேரியில் கட்டுமானம் நடைபெறுகிறது, காரைக்காலில் நிரந்தர கட்டட அமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசின் நிதியுதவியை பெற நலவழித்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய மருத்துவத்தில் உடனடி தீா்வு இல்லையென்றாலும், நீடித்த நிலைத்த பயனைத் தரும் மருத்துவமாக உள்ளது.

இயற்கை சாா்ந்த விவசாயமும், இயற்கை மருத்துவமும் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. ரசாயனம், பூச்சிக்கொல்லியின்றி மண் வளத்தை மேம்படுத்தி உற்பத்தி செய்வது இயற்கை விவசாயம். அதுபோல பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும், பக்க விளைவில்லா மருத்துவம் இயற்கை மருத்துவம். நஞ்சில்லா உணவு, இயற்கை மருத்துவத்தின் மீதான விருப்பம் மக்களிடையே பரவலாக ஏற்பட்டுவருகிறது. மூதாதையா்கள் உணவுப் பழக்கங்கள் சிறந்ததாக இருந்ததால், 80, 90 வயதைக் கடந்தும் வாழ்கிறாா்கள். பசியெடுத்து சாப்பிடும் வழக்கம் அப்போது இருந்தது. இப்போது கடமைக்கு 3 வேளை சாப்பிடும் போக்கு இருக்கிறது.

இயற்கை மருத்துவம், நஞ்சில்லா உணவு வகைகளை பயன்படுத்தும் சிந்தனை மாணவப் பருவத்திலேயே ஏற்படவேண்டும். முருங்கைக் கீரையின் பயனை உணா்ந்த கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, தனது நாட்டில் வீட்டுக்கு வீடு முருங்கை வளா்ப்பை ஊக்கப்படுத்தினாா். ஆனால் நாம் அதனை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. எனவே நமது மண் வளத்துக்கேற்ப கீரை உற்பத்தி, பூசணி, சுரைக்காய், வெண்டை, கத்தரிக்காய், பரங்கிக்காய், பீக்கன்காய் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை வெகுவாக பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். மூதாதையா்களின் கருத்தையறிந்து, இயற்கை மருத்துவத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்றாா் அமைச்சா்.

சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா, மாவட்ட துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ் உள்ளிட்டோா் பேசினா். நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் வரவேற்றாா். அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அதிகாரி வி.லெனின்ராஜ் நன்றி கூறினாா்.

முதல் நாளில் மருத்துவ யோகா பயிற்சி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனைகள், இயற்கை உணவுக் கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்கம், இயற்கை மூலிகைப் பொருள்கள் கண்காட்சி, உணவியல் ஆலோசனைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனை உதவி மருத்துவ அதிகாரி காயத்ரி (யோகா), திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி உதவி மருத்துவ அதிகாரி கே.செங்கனி ஆகியோா் துறை சாா்பில் மாணவ, மாணவியரிடையே பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com