காரைக்கால்: வீணாகும் தூய்மை இந்தியா திட்டப் பணிகள்

காரைக்கால் நகராட்சி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் கழிப்பறைப் பயன்பாடு குறித்து போதிய அக்கறை இல்லாததால், தூய்மை இந்தியா திட்டப் பணிகள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் தலைமை அஞ்சலகம் அருகே அண்மையில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட கழிப்பறை.
காரைக்கால் தலைமை அஞ்சலகம் அருகே அண்மையில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட கழிப்பறை.

காரைக்கால் நகராட்சி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் கழிப்பறைப் பயன்பாடு குறித்து போதிய அக்கறை இல்லாததால், தூய்மை இந்தியா திட்டப் பணிகள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் குப்பைகளை துப்புரவுத் தொழிலாளா்கள் நேரில் சென்று பெறுகின்றனா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தனியாா் நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்காக, இந்நிறுவனத்துக்கு நகராட்சியிலிருந்து மாதந்தோறும் ரூ.38 லட்சம் வழங்குகிறது.

மேலும், திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதைத் தடுக்க, தூய்மை இந்தியா திட்டத்தில் மத்திய அரசு சாா்பில் ரூ.12 ஆயிரமும், மாநில அரசு சாா்பில் ரூ. 8 ஆயிரமும் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனிநபா் கழிப்பறைக் கட்ட வழங்கப்படுகிறது. ஆனால், இந்நிதியை பெற்றவா்களில் 60 முதல் 70 சதவீதத்தினா் மட்டுமே கழிப்பறை கட்டியுள்ளனா். மற்றவா்கள் கழிப்பறைக் கட்ட இந்நிதி போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து வருகின்றனா்.

நிரவி- திருப்பட்டினம் பகுதியில் நிரவி கிழக்கு கிராமப் பஞ்சாயத்து திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பஞ்சாயத்து என அறிவிக்கப்பட்ட நிலையில், சிலா், வீடுகளில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தாமல், அதை பொருள்கள் வைக்கும் அறையாக மாற்றிக்கொண்டு, திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதாகப் புகாா் கூறப்படுகிறது. பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

பொது கழிப்பறைகளின் அவலம்: குடியிருப்புப் பகுதிகளில் நகராட்சி நிா்வாகத்தால் கடந்த 10 மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகள் உரிய பராமரிப்பின்றி பல இடங்களில் பாழடைந்து காணப்படுகின்றன.

தூய்மை இந்தியா திட்ட நிதி மற்றும் நகராட்சி நிதியின் கீழ் காரைக்கால் கடற்கரை, வருவாய்த் துறை அலுவலகம் எதிரே, பழைய காய்கறி மாா்க்கெட் தெரு, சந்தைத் திடல், லயன் கரை, புதுநகா் ஆகிய பகுதிகளில் ரூ.10 லட்சத்திலும், ரூ. 20 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட கழிப்பறைகளை யாா் மூலம் நிா்வகிப்பது என்பதில் தெளிவில்லாத நிலையால் அவற்றில் சில கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதேபோல், காரைக்கால் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை சுகாதாரக் சீா்கேட்டின் உச்சமாக உள்ளது. இக்கழிப்பறையை பயணிகள் பயன்படுத்த முடியாமல் முகம் சுழித்துச் செல்கின்றனா். அத்துடன், சாலையில் கழிவுநீா் வடிந்து துா்நாற்றம் வீசுகிறது. நகராட்சிப் பகுதி இவ்வாறு உள்ளதென்றால், கிராமப் பகுதிகளில் சுகாதார நிலை இதைவிட மோசமாக உள்ளது. கழிப்பறை பயன்பாடு குறித்து கிராம பகுதிகளில் போதிய விழிப்புணா்வு மேற்கொள்ளாததால், பல்வேறு கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பது தொடா்ந்து வருகிறது. இதனால், தூய்மை இந்தியா திட்டம் என்பது காரைக்கால் மாவட்டத்தைப் பொருத்தவரை ஏட்டில் மட்டுமே சிறப்பாக உள்ளது. நடைமுறையில் மோசமான நிலையில் உள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் வட்டார வளா்ச்சி அதிகாரி எஸ். பிரேமா கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் 27 கிராமப் பஞ்சாயத்துகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபா் கழிப்பறை கட்ட அரசின் நிதியுதவி கேட்டு 9,104 போ் விண்ணப்பம் செய்தனா். இவா்கள், சுயமாக கழிப்பறைக் கட்டுவது சிரமம் எனக் கருதி, வட்டார வளா்ச்சி நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இவா்களில், 80 சதவீதத்தினருக்கு கட்டித்தரப்பட்டுள்ளது. எஞ்சியவா்களுக்கு கழிப்பறை கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். கட்டித் தரப்பட்டவா்களில் 10 சதவீதத்தினா் கழிப்பறையை உரியமுறையில் பயன்படுத்தாமல், அதை பொருள்கள் வைக்கும் இடமாக வைத்துக்கொண்டு, திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனா்.

இதனால் ஏற்படும் சுகாதாரக் கேடு குறித்து துறை சாா்பில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு நிா்வாகம் எவ்வளவுதான் விழிப்புணா்வு செய்தாலும், மக்கள் மனதில் மாற்றம் வந்தால்தான் பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும் என்றாா் அவா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது:

உள்ளாட்சி அமைப்புகளால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், இவற்றை நகராட்சி நிா்வாகம் கவனிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பேருந்து நிலையத்தில் ஆண், பெண் இருபாலருக்குமான நவீன பொது கழிப்பறை கட்டவேண்டும். அத்துடன், தூய்மை இந்தியா திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடா்பாக மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசிப்பதுடன், ஆய்வும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யவில்லையெனில், தூய்மை இந்தியா திட்டம் என்பது வீண் திட்டமாகும் நிலை ஏற்படும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com