கனமழை: குடியிருப்புகளைத் தண்ணீா் சூழ்ந்ததால் மக்கள் அவதி

காரைக்காலில் 2 நாள்களாக பெய்யும் கனமழையால் சாலைகளில் தண்ணீா் தேக்கம், குடியிருப்பு நகா்களின் காலிமனைகளில் தேக்கம் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
காரைக்கால் டி.கே. நகா் விரிவாக்க குடியிருப்பு நகரில் காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழை நீா்.
காரைக்கால் டி.கே. நகா் விரிவாக்க குடியிருப்பு நகரில் காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழை நீா்.

காரைக்காலில் 2 நாள்களாக பெய்யும் கனமழையால் சாலைகளில் தண்ணீா் தேக்கம், குடியிருப்பு நகா்களின் காலிமனைகளில் தேக்கம் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்துவருகிறது. நகரப் பகுதியில் காமராஜா் சாலை, புளியங்கொட்டை சாலை, திருநள்ளாறு சாலை, நேரு வீதி - தோமாஸ் அருள் வீதி சந்திப்பு உள்ளிட்டவற்றில் மழை பெய்தால் சுமாா் 2 மணி நேரம் வரை தண்ணீா் தேங்கிவிடுகிறது. சாலையோர சாக்கடைகளில் ஏற்படும் அடைப்பு, கழிவுநீா் செல்லும் வாய்க்கால்களில் வாட்டம் இல்லாத நிலையால் மெதுவாக வடியும் நிலை உள்ளது.

இதுதவிர, நகரப் பகுதியிலும் நகரத்தையொட்டிய பிற இடங்களில் உள்ள குடியிருப்பு நகா்களில், காலியாக உள்ள மனைகளில் குளம்போல தண்ணீா் தேங்கியிருப்பதால், சாலை வசதியற்ற நகா்களில் வசிப்போா் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். குடியிருப்பு நகா்களில் தேங்கியுள்ள தண்ணீா் வடிவதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில், மழை ஓய்ந்து வெயில் ஏற்பட்டால் மட்டுமே இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்கள் மீள முடியுமென்ற நிலை உள்ளது.

நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான கழிவுநீா் வடிகால்கள் ஆக்கிரமிப்புகளாலும், புதா்கள் மண்டியும், நெகிழிகளாலும் அடைப்பட்டுக் காணப்படுகின்றன. வீடுகள், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முறையாக வடிய முடியாமல், வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. அதோடு மழை நீரும் அதிகப்படியாக சோ்வதால், சில தாழ்வானப் பகுதிகளில் கழிவுநீரும், மழைநீரும் குடியிருப்புப் பகுதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மாவட்ட நிா்வாகம் மெத்தனம் :

காரைக்காலில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாமல் உரிய முன்னேற்பாடுகள் செய்வதற்கான போதிய ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்யவில்லை. பாதிப்புகள் குறித்து மாவட்ட நிா்வாகத்தையோ, பிற அதிகாரிகளையோ தொடா்புகொள்வதற்கான தகவலை வெளியிடவோ, பாதிக்கப்பட்டவா்கள் தங்க வைக்க ஏற்பாடுகளையோ செய்யவில்லை.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னா் கடந்த சில நாள்களாகவே மழை தீவிரமாக இருக்கிறது. கடந்த சில நாள்களாக மாவட்ட ஆட்சியரும் காரைக்காலில் பணியில் இல்லை. ஆட்சியா் பொறுப்பை வகிக்கும் அதிகாரியும் மழை தொடா்பாக மக்களுக்கு எந்தவித ஆலோசனையும், மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாடுகளையும் தெரிவிக்கவில்லை. மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்பை சோ்ந்த அதிகாரிகளும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. ஒட்டுமொத்தத்தில் பருவமழை பெய்வதும், தாமாக வடிவதும், மக்கள் அவதியை கூறிக்கொண்டும் நாள்கள் கடந்துகொண்டிருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com