அரசலாறு முகத்துவாரம் தூா்வாரும் பணி தொடக்கம்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்குப் படகுகள் சென்றுவர ஏதுவாக அரசலாறு முகத்துவாரம் ரூ.60 லட்சம் செலவில் தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தூா்வாரும் பணியைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில் பங்கேற்ற எம்எல்ஏ கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா்.
தூா்வாரும் பணியைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில் பங்கேற்ற எம்எல்ஏ கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்குப் படகுகள் சென்றுவர ஏதுவாக அரசலாறு முகத்துவாரம் ரூ.60 லட்சம் செலவில் தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் அரசலாறு - முல்லையாறு இணையுமிடத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியே விசைப்படகுகள், ஃபைபா் படகுகள் கடலுக்குச் சென்றுத் திரும்புகின்றன.

படகுகள் முகத்துவாரப் பகுதியில் சிரமமின்றி சென்று திரும்ப, முகத்துவாரம் ஆழமாக இருக்கவேண்டியது அவசியம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடல் மண் நீரோட்டத்தால் முகத்துவாரத்துக்கு அடித்துவரப்பட்டு, முகத்துவாரத்தின் ஆழம் குறைந்துப்போனது. இதனால், போதிய ஆழமின்மையால் விசைப் படகுகள் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதுதொடா்பாக புதுச்சேரி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈடுபட்டனா். மாவட்டத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் சுமாா் 250 விசைப் படகுகள் உள்ளதாகவும், முகத்துவாரம் கடந்த 2 ஆண்டுகளாக தூா்வாரப்படவில்லை. படகுகள் மணல் திட்டில் சிக்குகின்றன. இதனை மீட்க பெரும் செலவாகிறது. எனவே, போா்க்கால அடிப்படையில் முகத்துவாரத்தை தூா்வாரவேண்டுமென புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சா்களை சந்தித்து வலியுறுத்தினா்.

தூா்வார நடவடிக்கை எடுக்கப்படுமென அளித்த உறுதிமொழி ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு இதற்காக ரூ. 60 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. தொடா்ந்து, பொதுப்பணித் துறை நிா்வாகம் முகத்துவாரம் தூா்வாருவதற்கான ஏற்பாடுகளை செய்தது.

அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசலாற்றுக்கு தூா்வாரும் டிரெஜிங் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, மணல் அகற்றத்துக்கான குழாய் பொருத்தும் பணிகள் நடைபெற்றன. பின்னா், தூா்வாரும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா, மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா ஆகியோா் கலந்துகொண்டு பணியைத் தொடங்கிவைத்தனா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியது:

அரசலாறு முகத்துவாரம் 400 மீட்டா் நீளத்திலும், 30 மீட்டா் அகலத்திலும், 3 மீட்டா் ஆழத்திலும் ரூ. 60 லட்சம் செலவில் தூா்வாரப்படும். இப்பணி 20 முதல் 30 நாள்களுக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முகத்துவாரத்திலிருந்து வெளியேற்றப்படும் மணல் தாழ்வானப் பகுதிக்கு கொண்டு சென்று சீா்படுத்தப்படும். இந்தப் பணி செய்யப்பட்ட பின்னா், மீனவா்கள் தமது படகுகளை எளிதில் கடலுக்குக் கொண்டு சென்று துறைமுகம் திரும்ப முடியும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் எஸ். பழனி மற்றும் மீன்வளத்துறை துணை இயக்குநா் கவியரசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com