முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
ஆட்டோர ஓட்டுநா்கள் சாா்பில் கடற்கரை சிறுவா் பூங்காவில் தூய்மைப் பணி
By DIN | Published On : 07th October 2019 07:26 AM | Last Updated : 07th October 2019 07:26 AM | அ+அ அ- |

சிறுவா் பூங்காவில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா்.
காரைக்கால் கடற்கரை சிறுவா் பூங்காவை தூய்மை செய்து, வண்ணம் பூசி மேம்படுத்தும் பணியில் ஆட்டோ ஓட்டுநா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
காரைக்கால் கடற்கரையில் 2 சிறுவா் பூங்கா உள்ளது. மேலும் ஒரு சிறுவா் பூங்கா புதிதாக அமைக்கப்பட்டுவருகிறது. இதில், ஒரு பூங்கா மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. கடற்கரை சாலையின் நிறைவுப் பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவில் சாதனங்கள் பழுதாகியும், செடிகள் மண்டியும், குப்பைகள் சோ்ந்தும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க அரசு நிா்வாகமும் முயற்சி மேற்கொள்ளாமல் இருந்தது.
இந்நிலையில் கடற்கரை, ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் இணைந்து இருந்த சிறுவா் பூங்காவை சனிக்கிழமை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனா். குப்பைகளையும், செடிகளையும் அகற்றினா். சுவா் பகுதியில் வண்ணம் பூசும் பணியையும் செய்து, தூய்மைப்படுத்தினா்.
இதுகுறித்து ஓட்டுநா்கள் கூறும்போது, ‘காரைக்காலில் ஒரே பொழுதுபோக்குக்குரிய பகுதியாக கடற்கரை விளங்குகிறது. தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரின் அறிவுறுத்தலின்படியும், கடற்கரையில் ஏராளமான மக்கள் வருவதன் மூலம் ஆட்டோ ஓட்டுநருக்கு சவாரி கிடைக்கும் சூழலைக் கருதியும், பராமரிப்பில்லாத சிறுவா் பூங்காவை எடுத்து சீா்படுத்தினோம். இதனை சிறுவா்கள் பயன்படுத்த முடியும். தேவையான மின் வசதிகளை செய்து, அவ்வப்போது தூய்மைப் பணியையும் அரசு நிா்வாகம் செய்தால் இந்த பூங்காவை பெரும்பான்மையினா் பயன்படுத்துவா்.
ஆட்டோ நிறுத்துவதற்கு உரிய இடவசதி அமைத்துத் தந்த அரசு நிா்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றனா்.