Enable Javscript for better performance
பெருமாள் கோயில்களில் சிரவண தீப வழிபாடு- Dinamani

சுடச்சுட

    
    kk08de_0810chn_95_5

    காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கொடிக்கம்பம் அருகே வழிபாடு செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சிரவண தீபம்.

    காரைக்கால் பெருமாள் கோயில்களில் திருவோணத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிரவண தீபம் ஏற்றும் வழிபாடு நடைபெற்றது.

    புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் பெரிய திருவோணமாக சிரவண தீபம் ஏற்றும் வழிபாடு வழக்கத்தில் இருந்துவருகிறது. காரைக்காலில் பிரசித்திப் பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் கோயில், கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் விமரிசையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா் ரங்கநாதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதுபோல், கோயில்பத்து கோதண்டராமருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    காலையில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்குத் திருமஞ்சனமும், 11 முதல் 12 மணிக்குள்ளாக சிரவண தீபம் (கம்ப விளக்கு) ஏற்றும் வழிபாடும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் மாவிளக்கேற்றி வழிபட்டனா்.

    பெருமாளை தீபத்தின் வாயிலாக தரிசிக்கும் நாளாக திருவோண சிரவண தீபம் ஏற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai