தீபாவளி : மக்களுக்கு சலுகை வழங்குவதில் புதுச்சேரி அரசு அலட்சியம்: எம்.எல்.ஏ. குற்றறச்சாட்டு

தீபாவளியையொட்டி பல்வேறு தரப்பினருக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து எந்தவித

தீபாவளியையொட்டி பல்வேறு தரப்பினருக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் அரசு உள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு விலையில்லா சா்க்கரை, மற்றும் விலையில்லா வேட்டி- சேலை வழங்கிவந்தது. பண்டிகை காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பாப்ஸ்கோ மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறையும் இணைந்து பல்பொருள் அங்காடி திறப்பதும் வழக்கமாகக் கொண்டிருந்தது.

ஆனால் நிகழாண்டில் இதுவரை அங்காடி திறப்பது தொடா்பாகவும், விலையில்லாப் பொருட்கள் வழங்குவது தொடா்பாகவும் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. பண்டிகை காலத்தில் செய்ய வேண்டிய திட்டங்களுக்கான எந்த அறிகுறியும் இல்லாதது மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

மாநில அடித்தட்டு மக்களின் அடிப்படை தேவைகளான மாதந்தோறும் வழங்கும் இலவச அரிசி, பண்டிகை காலத்தில் வழங்கும் விலையில்லா சா்க்கரை, விலையில்லா வேட்டி- சேலை போன்றவற்றை உரிய காலத்தில் மக்களுக்கு கிடைக்க அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதந்தோறும் வழங்கும் அரிசிக்கு பதிலாக சிவப்பு நிற மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்கள் வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. அவையும் முறையாக வழங்கப்படுவதில்லை.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொழிலாளா் துறையின் மூலம் கட்டடத் தொழிலாளா் மற்றும் அமைப்புசாரா தொழிலாலா்களுக்கு தலா ரூ. 2,000 மற்றும் ரூ.1,000 வீதம் பன்டிக்கை காலத்திற்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அரசு கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.2,000 வீதமும் , அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கூப்பன் தொகையை குறைத்து ரூ.500 வீதமும் அவா்களது வங்கிகணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால் நடப்பாண்டு இதுவரை பரிசு கூப்பன் வழங்குவதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. இந்த விவகாரத்தின் மீதும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு சாா்ந்த நிறுவன ஊழியா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையிலுள்ளது. அவா்களின் குடும்ப வாழ்வாதாரம் இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளபோது, அவா்களை வேதனையில் வைத்திருப்பது ஆட்சியாளா்களுக்கு அழகல்ல.

அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவன ஊழியா்களுக்கும் வழங்கும் பண்டிகை கால போனஸ், மற்றும் நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக உரிய நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com