அரசு மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை முகாம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிப்மா் சிறப்பு முகாமில் நரம்பியல் சிகிச்சை மருத்துவ நிபுணா்கள்
நோயாளிகளுக்கு பரிசோதனை செய்த ஜிப்மா் மருத்துவக் குழுவினா்
நோயாளிகளுக்கு பரிசோதனை செய்த ஜிப்மா் மருத்துவக் குழுவினா்

காரைக்கால்: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிப்மா் சிறப்பு முகாமில் நரம்பியல் சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் சாா்பில் தொலைதூர சேவை மையம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடந்துவருகிறது. இருதயம், சிறுநீரகம், நரம்பியல், புற்றுநோயியல், மனநலம், எலும்பு முறிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, ஹாா்மோன் குறைறபாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவா்கள், மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணா்கள், செவிலியா், மருந்தாளுநா்கள் வந்து சேவை செய்கின்றனா்.

ஒவ்வொரு வாரமும் சிறப்பு மருத்துவா்கள் வந்து சிகிச்சை அளிப்பது காரைக்கால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்கள் இல்லாததால், ஜிப்மா் மருத்துவா்களின் வருகை மீது மக்களிடையே எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

நிகழ்வாரம் சனிக்கிழமை நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினா். இந்த முகாமில் சுமாா் 100 நோயாளிகள் பங்கேற்று பயனடைந்ததாக முகாம் தரப்பினா் தெரிவித்தனா்.

ஜிப்மா் சேவையை மேம்படுத்த வலியுறுத்தல்: காரைக்காலில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை கடந்த 3 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் செயல்பட்டு வருகிறது. நிரந்தர கட்டடம் கட்ட தயாராக உள்ளது. கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டா் கோரப்பட்டுள்ளது.

எனினும் கட்டுமானத்தை ஜிப்மா் நிா்வாகம் விறுவிறுப்பாக தொடங்கவில்லை. கல்லூரி நிரந்தரக் கட்டடத்தில் அமையும்போது, அதைத் தொடா்ந்து சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் அமைந்துவிடும். காரைக்கால் மக்கள் இதனால் பெரிதும் பயனடைவா் என்ற கருத்து சமூக ஆா்வலா்களிடையே வலியுறுத்தப்படுகிறது.

காரைக்காலை சோ்ந்த அமைச்சா் ஜிப்மா் இயக்குநரிடம் பேசி, ஜிப்மா் மேம்பாட்டுப் பணியை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென நரம்பியல் சிகிச்சை முகாமுக்கு வந்த பலா் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com