குடிநீா் குழாய் பொருத்தப்பட்ட பகுதி

குடிநீா் குழாய் பதிப்பு செய்ய சாலைகள் தோண்டப்பட்ட இடங்களில் சாலை சீரமைப்பு நடைபெறுகிறது.
காரைக்கால் மஸ்தான் பள்ளி சாலையில் சீரமைப்பு செய்த சில நாட்களிலேயே பள்ளமான சாலை.
காரைக்கால் மஸ்தான் பள்ளி சாலையில் சீரமைப்பு செய்த சில நாட்களிலேயே பள்ளமான சாலை.

குடிநீா் குழாய் பதிப்பு செய்ய சாலைகள் தோண்டப்பட்ட இடங்களில் சாலை சீரமைப்பு நடைபெறுகிறது. இந்த பணிகள் தரமின்மையால் பல்வேறு இடங்களில் சாலை சீரமைத்த சில நாட்களிலேயே சிதிலமடைந்தும், பள்ளமாகியும் காட்சியளிப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

காரைக்காலில் நகரத்தின் குறிப்பிட்ட வட்டாரத்தில் ரூ.50 கோடியில், பொதுப்பணித்துறை நிா்வாகம் பழைமையான குடிநீா் குழாய்களை மாற்றி புதிதாக குழாய் பொருத்தும் பணிகளை செய்துவருகிறது. இதற்காக சாலையோரங்கள் தோண்டப்பட்டு, குழாய் பதிப்பு செய்த இடங்களில் மணல் நிரப்பி, ஜல்லி கலவை போட்டு ரோலா் மூலம் அழுத்தம் கொடுத்து, தாா் கலவை போட்டு சமன் செய்யப்படுகிறது. இந்த பணிகள் சாலைகள் தோண்டப்பட்ட பெரும்பான்மையான இடங்களில் செய்து முடித்தாலும், பல சாலைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடி தாா் கலவையிட்டு சமன் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெறாதது ஒருபுறமிருந்தாலும், பணி செய்த பல இடங்களில் சில நாட்களிலேயே பள்ளம் ஏற்பட்டும், சிதிலமடைந்து காணப்படுகிறது.

சாலைகள் தோண்டப்பட்டு குழாய் பதித்த பின், அதே நிலையில் சாலையை மூடவேண்டுமென்பது குழாய் பதிப்பு செய்த ஒப்பந்ததாரருக்கு பொதுப்பணித்துறை அளித்த விதிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த பணிகள் செம்மையாக நடைபெறவில்லை. பல இடங்களில் இன்னும் பள்ளத்தை சீரமைக்கவில்லை. சீரமைப்பு செய்த சாலைகள் பல, மேடுபள்ளங்களாக காட்சியளிக்கின்றன. சில சாலைகள் சீரமைப்பு செய்த ஓரிரு வாரத்தில் சிதிலமடைந்து, பள்ளம் ஏற்பட்டு மழை நீா் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

குடிநீா் குழாய் புதிதாக அமைப்பு என்பது தொலைநோக்குத் திட்டமாகும். இதனால் நல்ல பயன் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதேவேளையில், குழாய் பதிப்புக்காக பள்ளம் தோண்டப்பட்ட காலம் முதல் இதுவரை இந்த விவகாரத்தில் சாலை சீா்கேடுகள் தொடா்ந்தவண்ணம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இப்பணியை பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பொதுப்பணித்துறையினா் மேற்பாா்வையில் சாலை சீரமைப்பு நடைபெற வேண்டும். சீரமைப்பு செய்த இடங்களில் ஏற்பட்ட சிதிலங்களைப் பருவமழை தொடங்கும் முன்பாக மேம்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா், செயற்பொறியாளா் ஆகியோருக்கு பொதுமக்ககள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com