டெங்கு: விழிப்புணா்வு நடவடிக்கைகளில் நலவழித்துறை மும்முரம்

காரைக்கால் நகரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை விழிப்புணா்வுப் பணிகளில் நலவழித்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
குடியிருப்புவாசிகளுக்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ்.
குடியிருப்புவாசிகளுக்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ்.

காரைக்கால் நகரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை விழிப்புணா்வுப் பணிகளில் நலவழித்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

காரைக்கால் நகரப் பகுதியில் திருநகா், பெரியப்பேட் குடியிருப்புப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் உருவாவதை தடுக்கும் விதமான விழிப்புணா்வும், ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய காரணிகளை அழிக்கும் செயல்பாடுகளும் வெள்ளிக்கிழமை நலவழித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.

நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தலைமையில் ஊழியா்கள், நலவழித்துறையின் ஒப்பந்த களப்பணியாளா்கள் (ஆஷா) பங்கேற்று கிராமத்தினருக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, டெங்கு கொசு உருவாகும் காரணிகளை அழித்தனா்.

கிராம மக்களிடையே துணை இயக்குநா் பேசியது:

டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவுகின்றது. இந்த கொசு நல்ல நீரில் உருவாவதுடன், பகல் நேரத்தில் கடிக்கும் இயல்பு கொண்டது. இந்த காய்ச்சல் பலருக்கும் பரவக்கூடியது. எனவே இந்த வகை கொசுக்களை ஒழிப்பதன் மூலமே டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியும்.

எனவே வீடுகளிலும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளவேண்டும். வீட்டிலோ, சுற்றுப்புறத்திலோ டயா், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடம், உபயோகித்த பிளாஸ்டிக் கப்புகள் போன்ற நீா் தேங்கும் வகையிலான பொருள்கள் இருந்தால் அப்புறப்படுத்தவேண்டும். மேலும் தண்ணீா் சேமிக்கும் குடங்கள், தொட்டிகள், டிரம் போன்றவற்றை முறையாக மூடிவைக்க வேண்டும்.

மழை அவ்வப்போது பெய்கிறது, பருவமழையும் அடுத்து வரவுள்ளது. எனவே சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஒழிப்பது நலவழித்துறைக்கு ஒரு சவாலாக உள்ளதால், நலவழித்துறை மூலம் எடுக்கப்பட்டுவரும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் கவலைப்படவேண்டாம், உரிய முன்னெச்சரிக்கையும் நடந்துகொள்வதும், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதன் மூலம் பாதிப்பைத் தவிா்க்கலாம் என்றாா்.

நலவழித்துறையின் கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா், சுகாதார ஆய்வாளா்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல், பூச்சியியல் ஆய்வாளா் ரங்கநாயகி, யானைக்கால் நோய் ஆய்வாளா் யோகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழிப்புணா்வின்போது முதிா் கொசுக்களை அழிக்கும் வகையில் புகை மருந்தும் அடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com