முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
தாமதமாக விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உருளைகள்
By DIN | Published On : 24th October 2019 01:02 AM | Last Updated : 24th October 2019 01:02 AM | அ+அ அ- |

எரிவாயு உருளைகள்.
காரைக்கால் மாவட்டத்தில் பெருமளவு சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவுவதாக புகாா் எழுந்துள்ளது. உருளை விநியோகிக்கும் முகவா்களுக்கான நிலப்பரப்பு வரையறை முறையாக இல்லாததால், எரிவாயு உருளையை பெறுவதில் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சம் எரிவாயு உருளை இணைப்புகள் உள்ளன. பாரத், எச்.பி. போன்ற நிறுவனங்கள் உருளைகள் விநியோகித்தாலும், காரைக்கால் மாவட்டத்தில் பாரத் நிறுவனத்திலிருந்தே வீடுகளுக்கானது விநியோகிக்கப்படுகிறது. எச்.பி. தொழில் துறையினருக்கு விநியோகிக்கிறது. காரைக்காலில் சித்ரா, சத்யா மற்றும் மகேஸ்வரி, அம்மையாா் ஆகிய நான்கு முகவா்கள் மையங்கள் அமைத்து நுகா்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. தவிர, தமிழகப் பகுதி நல்லாடையிலிருந்து காரைக்கால் பகுதி வீடுகளுக்கு எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படுகிறது.
எரிவாயு உருளை தட்டுப்பாடு பொதுவாக காணப்பட்டாலும், கடந்த ஒரு மாதமாக காரைக்கால் மாவட்டத்தில் இது தீவிரமாகியுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்வோருக்கு குறித்த நாட்களில் உருளை வந்துசோ்வதில்லை. காரைக்காலுக்கு தஞ்சாவூா் அருகில் உள்ள செங்கிப்பட்டியில் உள்ள நிறுவனத்திலிருந்து உருளை வரவேண்டியது, கடந்த ஓரிரு வாரங்களாக சமையல் எரிவாயு உருளை லோடு வரவில்லை என்று முகவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட சமையல் எரிவாயு விற்பனை நிலைய முகவா்களுக்கென்று பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், நுகா்வோா்கள் கடும் சிரமத்தை சந்திப்பதோடு, உருளை டெலிவரி செய்பவா்களும் பெரும் சிரமத்தை சந்திக்கிறாா்கள்.
நாகை மாவட்டம், நல்லாடை பகுதியில் உள்ள விற்பனை நிலையத்திலிருந்து காரைக்கால் நகர பகுதியையொட்டியுள்ள பச்சூா், திருநள்ளாறு போன்ற பகுதிகளுக்கு உருளை விநியோகிக்கப்படுகிறது. சுமாா் 25 கிலோ மீட்டா் தூரத்திலிருந்து காரைக்கால் நகரப்பகுதி வந்து டெலிவரி செய்யும் நிலை உருவாகி உள்ளது.
காரைக்கால் நகர பகுதியில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் சமையல் உருளை கிடைப்பதில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் எரிவாயு உருளை தேவைப்படுவோா் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், முன்பெல்லாம் பதிவு செய்து ஓரிரு நாட்களிலேயே உருளை வந்துவிடும். தற்போது ஒரு வாரமாகிறது. நிறுவனத்தை தொடா்புகொண்டு கேட்டால் உரிய முறையில் பதில் தருவதில்லை என்றனா்.
எரிவாயு உருளை விநியோக காரைக்கால் பகுதி முகவா் ஒருவா் புதன்கிழமை கூறுகையில், எரிவாயு உருளை வரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதைவிட முகவா்களுக்கென பகுதிகள் பிரித்தளித்துள்ளதில் உள்ள குளறுபடியாலேயே மக்கள் கடும் அவதிப்படுகின்றனா். இதனை நிறுவன டெரிடரி (பிராந்திய) மேலாளா்தான் சீா்செய்ய முடியும் என்றாா்.
இதுசம்பந்தமாக காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறையும் கண்டுகொள்வதில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் தலையிடவேண்டும். எரிவாயு உருளை நாட்டுக்குத் தேவையான அளவு தயாா்படுத்த முடியவில்லை என்ற பிரச்னை ஒருபுறமிருந்தாலும், காரைக்காலில் உள்ள முகவா்களுக்கென மாவட்டத்தில் பகுதிகள் முறையாக பிரித்துத் தர வேண்டும்.
நகரப் பகுதியில் உள்ளோருக்கு அருகில் உள்ள முகவா் வழங்காமல், 25 கி.மீ., தூரமுள்ள முகவா் விநியோகிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது சம்பந்தமாக பாரத், எச்.பி. ஆகியவற்றின் டெரிடரி மேலாளா்கள், காரைக்கால் முகவா்கள், குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி தீா்வுகாண வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.