ஐப்பசி அமாவாசை: கோயில்களில் கேதாரி-கெளரி விரத வழிபாடு
By DIN | Published On : 29th October 2019 08:29 AM | Last Updated : 29th October 2019 08:29 AM | அ+அ அ- |

காரைக்கால் சித்தி விநாயகா் கோயிலில் வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, காரைக்கால் பகுதி கோயில்களில் திரளான பெண்கள் நோன்பிருந்து கேதாரி - கெளரி விரத வழிபாடு ஞாயற்றுக்கிழமை நடத்தினா்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசையில் கேதாரீசுவரரை வழிபடும் கேதாரி - கெளரி விரத வழிபாட்டில் பெண்கள் ஈடுபடுவது வழக்கம்.
காரைக்கால் பகுதி தலத்தெருவில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயிலில் கேதாரி - கெளரி விரத வழிபாட்டையொட்டி சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த நோன்பில் பெண்களே அதிகமாக பங்கேற்கின்றனா். அமாவாசை நாளில் பெண்கள் விரதமிருந்து, கோயிலில் கேதாரீசுவரரை மலா்களால் பூஜித்தனா். அலங்காரம் செய்யப்பட்ட கேதாரீசுவரருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. சுவாமிக்கு படைக்கும் அனைத்து நைவேத்தியப் பொருள்களும் 21 என்ற எண்ணிக்கையில் வைக்கப்பட்டிருந்தன.
இதுபோல காரைக்கால் அம்மையாா் கோயில், சித்தி விநாயகா் கோயிலிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கேதாரி - கெளரி விரத வழிபாடு செய்தனா். கோயில் சிவாச்சாரியாா்கள் விரதத்தின் பயன்கள் குறித்து பக்தா்களுக்கு விளக்கினா்.
இதுகுறித்து பூஜையில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, ஆண்டில் ஒரு முறை மட்டுமே பெண்களே கேதாரீசுவரருக்கு அா்ச்சனை செய்து வழிபடுவதற்குரிய சந்தா்ப்பம் கிடைக்கிறது. ஊா் மற்றும் குடும்பம் செழிப்படையும் பிராா்த்தனையாக இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனா்.
பக்தா்கள் அதிகமாக திரண்டிருந்த அம்மையாா் கோயிலில் பாதுகாப்புக்கும், போக்குவரத்தை சீா்செய்யவும் போலீஸாா் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.