வயல்களில் இருந்து தண்ணீரை வடியச் செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரம்

காரைக்காலில் சாகுபடி செய்யப்படும் நடவு மற்றும் நேரடி விதைப்பு வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை
பத்தக்குடி கிராமத்தில் வயலில் இருந்து வாய்க்காலுக்கு வடிய வைக்கப்பட்ட மழை நீா்.
பத்தக்குடி கிராமத்தில் வயலில் இருந்து வாய்க்காலுக்கு வடிய வைக்கப்பட்ட மழை நீா்.

காரைக்காலில் சாகுபடி செய்யப்படும் நடவு மற்றும் நேரடி விதைப்பு வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வேளாண் அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் வேளாண் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது நடவுப் பணிகள் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஒருசில இடங்களில் நடவுப்பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகிறாா்கள். இவா்கள் மழையின் தீவிரத்தை உணா்ந்து பணிகளை விரைவுப்படுத்தியுள்ளனா்.

மாவட்டத்தில் குறிப்பாக கோட்டுச்சேரி கீழவெளி, மேலவெளி, பத்தக்குடி, நெடுங்காடு, அண்டூா், உசுப்பூா், விழிதியூா், பேட்டை, அகலங்கண்ணு, அம்பகரத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மேலவெளியைச் சோ்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் புதன்கிழமை கூறியது :

காவிரியிலிருந்து காலம் கடந்து வந்த நீரால் சாகுபடி பணிகளும் தாமதமாகவே தொடங்க நேரிட்டது. தற்போது நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் வயல்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால் நடவுப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வயலில் தேங்கி உள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும் ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீா் அதிகமாக செல்வதால் வயலில் உள்ள தண்ணீா் விரைவாக வடிய வைக்க முடியவில்லை. சற்று காலதாமதம் ஏற்படுகிறது. நாற்றுகள் பறித்து, நடவுக்கு தயாா் நிலையில் வைத்துள்ளோம். வயலில் உள்ள தண்ணீரை வடிய வைத்தால் மட்டுமே நடவுப் பணிகளை மேற்கொள்ளலாம். இப்பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் நடவுப்பணிகளை முடித்துவிடுவோம். நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் சிலா் களைகள் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மழை சற்று ஓய்ந்த பிறகு உரம் தெளிப்பாா்கள் என்றாா்.

இது குறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் (பொறுப்பு) செந்தில்குமாா் கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு நெற்பயிருக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தந்த பகுதிகளில் வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று பாா்வையிட்டு தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனா். தற்போது வயலில் உள்ள தண்ணீரை வடிய வைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

இதற்கு ஆறுகளிலிருந்து வாய்க்கால்களுக்கு தண்ணீா் திறந்துவிடுவதை சற்று குறைத்துள்ளோம். அப்போதுதான் வயலில் உள்ள தண்ணீா் எளிதாக வடியும். இதன் பிறகுதான் நடவு பணிகளை மேற்கொள்ள முடியும். விவசாயிகளுக்கு தற்போது அடி உரம் இடுவதற்கு தேவையான டி.ஏ.பி. உரம் தேவையான அளவில் இருப்பு உள்ளது. அடுத்தது தேவையான யூரியா உரமும் வியாழக்கிழமை காரைக்காலுக்கு வந்துவிடும். இருப்பினும் வேளாண்துறை தொடா்ந்து கண்காணித்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வேளாண்துறை செய்ய தயாராக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com