புதுச்சேரி மாநிலத்தில் நீடிக்கும் குழப்பமான கல்வி முறை: கல்வியாளர்கள், மாணவர்கள் அதிருப்தி

புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகளில்  நீடிக்கும் வெவ்வேறான கல்வித் திட்டங்களால்  கல்வியாளர்கள், மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நீடிக்கும் குழப்பமான கல்வி முறை: கல்வியாளர்கள், மாணவர்கள் அதிருப்தி

புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகளில்  நீடிக்கும் வெவ்வேறான கல்வித் திட்டங்களால்  கல்வியாளர்கள், மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இரண்டு பிராந்தியங்களும் தமிழ்நாடு கல்வி வாரியத்தின் சமச்சீர் கல்வி முறையைப் பின்பற்றுகின்றன. மாஹே பிராந்தியம் கேரள மாநிலக் கல்வி வாரியத்தையும், யேனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலக் கல்வி வாரியத்தையும் பின்பற்றிவருகிறது.
அங்கீகாரமற்ற கல்வி முறை: புதுச்சேரியில் 1 முதல் 5 வரை சி.பி.எஸ்.இ. கல்வி முறை பின்பற்றப்படுகிறது. ஆனால், மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் அங்கீகாரத்தை இத்திட்டம் தொடங்கியது முதல் இதுவரை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. பெங்களூருவிலிருந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் புத்தகங்களை வாங்கி, பாடம் நடத்துவதாகவும், காரைக்காலில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் நடைபெறும் தனியார் பள்ளிகளுக்குரிய தகுதியில் இதே பாடத் திட்டத்தை நடத்தும் அரசுப் பள்ளிகளுக்கு இல்லை எனவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெறவேண்டுமெனில், அதற்கான தகுதியில் பள்ளிகள் அமையவேண்டும். அங்கீகாரம் கிடைத்துவிட்டால், மாநிலக் கல்வித்துறையினர்  யாவரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவர். இதனால் அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை போதிக்கும் தகுதியில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. 5 வரை ஒரு பாடத் திட்டமும், 6 முதல் ஆங்கில வழி பாடத் திட்டமும் என்பது மாணவர்களை குழப்பும் செயலாக இருக்கிறது. எனவே, கல்வியில் போட்டிகள் மிகுந்துவரும் சூழலில், புதுச்சேரி மாநிலத்தில் ஒரே கல்வி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
முன் மழலையர் ஆசிரியர்கள் இல்லை:  அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. காரைக்காலைப் பொருத்தவரை, தொடங்கப்பட்ட காலம் முதல் இந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.  96 பேரில் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதேபோல், ஆசிரியர்களுக்கான உதவியாளராக  96 பேர் இருக்கவேண்டிய நிலையில், 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.  உதவியாளரே தங்களது பள்ளியில் மழலையர்களுக்கு வகுப்பு எடுக்கும் அவலம் நிலவுகிறது. 
காலிப்பணியிடங்கள்: காரைக்காலில் மட்டும் 900 ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன.  முதன்மைக் கல்வி அதிகாரி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் ஆகிய இரு பிரதான பணியிடங்கள் நிரந்தரமின்றி பொறுப்பு நிலையிலேயே உள்ளது.  காரைக்கால் கல்வித் துறையில் மண்டலம் 1-இல் 26 பள்ளிகள், மண்டலம் 2-இல் 34 பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 13, உயர்நிலைப் பள்ளிகள் 18, மேல்நிலைப் பள்ளிகள் 10 என அரசுப் பள்ளிகள் 101 உள்ளன. இவற்றில் முன் மழலையர் ஆசிரியர் 93, பட்டதாரி ஆசிரியர்கள் 62, மேல்நிலைக் கல்வி விரிவுரையாளர்கள் 17, தலைமையாசிரியர் (தொடக்கப்பள்ளி) 14, தலைமையாசிரியர் நிலை 1-இல் 11, நிலை 2-இல் 30, மேல்நிலைப் பள்ளி முதல்வர் 6, தவிர உடற்கல்வி ஆசிரியர்கள், நூலகர் 28 என 263 பணியிடங்கள் காலியாக உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மாவட்டத்தில் உள்ள 101 அரசுப் பள்ளிகளில் 16,862 மாணவ மாணவியர் தற்போது படிக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு 16,063 மாணவர்கள் படித்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் 759 மாணவர்கள் அதிகரித்துள்ளனர். இது அரசுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பும், சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட தொடக்கப் பள்ளிகளில் போதிப்பு முறை, மாணவர்களின் திறன் உள்ளிட்ட காரணங்களால் இந்த வளர்ச்சி என கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
காலிப் பணியிடங்களை புதுச்சேரி கல்வித்துறை விரைவாக நிரப்பினால் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிப்பதோடு, 100 சதவீதம் தேர்ச்சி காட்டும் பள்ளிகள், மாணவர்களை மதிப்பெண் நிலையில் உயர்த்திக்காட்டும் என்பது மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 
நீட் தேர்வு முறை வந்ததால், மேல்நிலைக் கல்வியை பிற தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளியில் இலவசமாக படித்துவிட்டு, 2 ஆண்டு தனியார் பள்ளியில் படித்தால் ஆகக்கூடிய செலவை,  நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு செலவு செய்யும் நோக்கில் அரசுப் பள்ளியை நாடுவதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகறது. இந்த நிலையில், மேல்நிலைப் பள்ளிகளில் காலியிடம் இல்லாத அளவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வி நிலையை எட்டுவார்கள். இதற்கிடையில், புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், புதுதில்லி அரசுப் பள்ளிகளில் மகிழ்ச்சி  கல்வித் திட்டம் அமலில் உள்ளதைப்போல், புதுச்சேரி மாநிலத்திலும் சோதனை முறையில் சில பள்ளிகளில் இத்திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
 ஆனால், மழலையர் பள்ளி முதல் அனைத்து நிலையிலும் ஆசிரியர் காலிப் பணியிடம் உள்ளபோது, புதிய கல்வித் திட்டத்தை எவ்வாறு வெற்றி காணச் செய்ய முடியும் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன், மாநிலக் கல்வி அமைச்சர், காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பணி நேரத்தை உறுதிப்படுத்தவேண்டும்:  பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என்பதுடன், மாலையில் பள்ளி நேரம் முடியும் வரை வகுப்பறையில் இருப்பதில்லை என புகார் கூறப்படுகிறது.  சில  மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர்கள், மாலையில் தனியாக டியூஷன் எடுப்பதற்காக பள்ளி நேரம் முடிவதற்கு முன்பே பள்ளியிலிருந்து சென்றுவிடுகின்றனர். இதன் மீது மாநிலக் கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்: ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல், சி.பி.எஸ்.இ. கல்வியோ, சமச்சீர் ஆங்கில வழிக் கல்வியோ, ஒரே கல்வி முறையை அமல்படுத்துதல், பொறுப்பு அதிகாரி என்ற நிலையின்றி நிரந்தர அதிகாரிகள் நியமித்தல், ஆசிரியர்கள் பணி நேரத்தை முறைப்படுத்துதல், கல்வி மேம்பாட்டுக்கேற்ப ஆசிரியர்களுக்கு அவ்வப்போது திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றை கல்வித்துறை செய்யுமானால், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண் எடுப்பதோடு, தேர்ச்சி வீதமும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆர்.காளிதாசன் கூறியது:  அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணிடங்களே கல்வித்துறையின் முக்கிய பிரச்னையாக உள்ளது. மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பிற ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. 
ஒரே கல்வி முறையை மாநிலத்தில் அமல்படுத்தவும் ஆசிரியர்கள் போராட்டத்தில் வலியுறுத்துகிறோம். ஒரே கல்வி முறை இல்லாதது மாணவர்களைப் பாதிக்கச் செய்கிறது. 
இவற்றின் மீது கல்வித்துறை சரியான தீர்வை இதுவரை ஏற்படுத்தவில்லை. காரைக்காலை சேர்ந்தவர் கல்வித் துறை அமைச்சராக இருப்பதால், கல்வித் துறையின் மீதான புரிதல் அவருக்கு உள்ளதால், அவரால் நிச்சயம் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை சீர்செய்ய முடியும் என நம்பிக்கையுடன், பல கட்டமாக கோரிக்கைகள் வைத்துவருகிறோம். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அரசுப் பள்ளியின் கல்வித்தரம் மேலும் உயர்வது உறுதி என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com