சுடச்சுட

  

  காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினர் அசனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தின் நிதி ரூ.30 கோடியில் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களின்மை, சவக்கிடங்கில் குளிர்சாதன பெட்டி குறைபாடு, ஆம்புலன்ஸ் வாகனங்களில் வசதிகளின்மை போன்ற பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன.
  இந்நிலையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, இம்மருத்துவமனையில்  ஆய்வு செய்தார். அவர், நோயாளிகளைச் சந்தித்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ராவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி (பொ) மதன்பாபு உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
  ஜிப்மர் நிர்வாகத்தின் நிதியில் நடைபெறும் பணிகள், மருத்துவர்களின் பணிகள், ஆம்புலன்ஸ் வசதிகள், மருந்துகள் கையிருப்பு போன்ற பல்வேறு விவரங்களை மருத்துவ அதிகாரியிடம் பேரவை உறுப்பினர் கேட்டறிந்தார்.
  அப்போது, மருத்துவமனையில் ரேடியாலஜி நிபுணர் இல்லை, 620 பணியிடங்களில் தற்போது 168 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவமனையை பொருத்தவரை தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை தரப்படுகிறது. சிறப்பு நிபுணர்கள் இல்லாததால், திங்கள், வியாழக்கிழமையில் புதுச்சேரியிலிருந்து மருத்துவர்கள் வந்து பணி செய்து செல்கின்றனர் என மருத்துவ அதிகாரி பேரவை உறுப்பினரிடம் தெரிவித்தார்.
  இந்த ஆய்வு குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா கூறியது: காரைக்கால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.10 கோடி தருமாறு மாவட்ட நிர்வாகத்தால் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ரூ.33 லட்சம் மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது. மருந்துகளுக்காக ரூ.1 கோடி கோரப்பட்டதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும் தற்போதைய ஆய்வு விவரங்கள் குறித்து முதல்வர், நலவழித்துறை அமைச்சரை சந்தித்துப் பேசி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai