சுடச்சுட

  

  பள்ளிகளில் ரொட்டி, பால் வழங்கும் ஊழியர்கள் தர்னா போராட்டம்

  By DIN  |   Published on : 13th September 2019 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணி நிரந்தரம் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிகளில் ரொட்டி, பால் வழங்கும் ஊழியர்கள் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  காரைக்கால் கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் ரொட்டி, பால் வழங்கும் ஊழியர்கள் சங்கத்தினர், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில், சங்கத் தலைவர் பி. தனவள்ளி தலைமையில்  தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இப்போராட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து, போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர். ஆனால், போராட்டத்தைக் கைவிட மறுத்து வளாகத்திலேயே தங்கினர். மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜன், வட்ட துணை ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், கண்மணி உள்ளிட்டோரும் அவர்களிடம் பேச்சு நடத்தினர். எனினும், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நீடித்தது. இப்போராட்டம் குறித்து ஊழியர்கள் கூறியது: பள்ளிகளில் ரொட்டி, பால் வழங்கும் பணிக்காக அமர்த்தப்பட்ட ஊழியர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரமின்றி, பால் வழங்குதல், காய்கறி வெட்டித் தருதல், சமையல் உதவி, மாணவர்களுக்கு உணவு வழங்குதல், பள்ளி வளாகத்தை தூய்மை செய்தல், கழிப்பறை தூய்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கல்வித் துறையின் உத்தரவின்படி செய்துவருகிறோம். பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக  முதல்வர் கூறினார். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதம் ரூ.6,450 ஊதியத்தில் நாள் முழுவதும் பணியாற்றிவருகிறோம். காரைக்கால் மாவட்டத்தில் 134 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். காலை 7.30 முதல் 10 மணி வரை பால் காய்ச்சி, மாணவர்களுக்கு அளித்துவிட்ட பிறகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கான பணியை செய்துவிட்டே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். புதுச்சேரி அரசு எங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai