பரிதாப நிலையில் காரைக்கால் நூலகங்களின் பராமரிப்பு 

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நூலகங்கள் பராமரிப்பின்றியும்,
பரிதாப நிலையில் காரைக்கால் நூலகங்களின் பராமரிப்பு 

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நூலகங்கள் பராமரிப்பின்றியும், போதிய பணியாளர்கள் இல்லாமலும் பரிதாப நிலையில் உள்ளது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூலகங்களை கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கல்வித் துறை வசம் இருந்த நூலகங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டன. நூலகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. பள்ளிகளில் செயல்படும் நூலகங்கள் மட்டும் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஊர்ப்புற மற்றும் நகரங்களில் உள்ள நூலகங்கள் யாவும் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் வந்தன. ஆனால், இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள பணியாளர்கள் ஓய்வுபெறும்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதுமில்லை. காரைக்காலைப் பொருத்தவரை இத்துறைக்குத் தலைமை அதிகாரியான உதவி நூலகத் தகவல் அதிகாரி முதல் கிளை நூலகங்களை நிர்வகிக்கும் நூலகத் தகவல் உதவியாளர் வரை காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
காரைக்கால் நகரப் பகுதியில் ஒரு பொது நூலகமும், மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் 18 கிளை நூலகங்களும் உள்ளன. ஆனால், 2 நூலகத் தகவல் உதவியாளர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் பொது நூலகத்திலும், மற்றொருவர் கிளை நூலகம் ஒன்றிலும் பணியில் உள்ளனர். மற்ற 17 நூலகங்களிலும் நூல்கள் விநியோகம் இல்லை. நாளிதழ்களை மட்டுமே வாசகர்கள் படித்துவிட்டுச் செல்கின்றனர். புத்தகங்கள் அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்டு, காட்சிப் பொருளாகவே உள்ளன. வாசகர்களில் ஒருவர், நூலகங்களைத் திறப்பதும், பூட்டிச் செல்வதுமான நிலை உள்ளது.
செயல்படாத பொது நூலகம்: காரைக்காலில் உள்ள பொது நூலகத்தில் கடந்த 3 மாதங்களாக சீரமைப்புப் பணி நடைபெறுவதால், இந்நூலகத்தின் ஒரு பிரிவு அருகில் உள்ள செய்தி மற்றும் விளம்பரத் துறை வளாகத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது. இங்கு நாளிதழ் வாசிப்பு மட்டுமே நடைபெறுகிறது. இதனால், கிளை நூலகங்கள் மட்டுமின்றி பொது நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் நாவல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படாமல் கரையான்கள் அரிக்கும் நிலையில் உள்ளதாக வாசகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறைந்து வரும் வாசிப்புப் பழக்கம்: பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் நூலகங்கள் நலிவடைந்துவருவது ஒருபுறமிருந்தாலும், பொதுமக்களிடையே  வாசிப்புப் பழக்கம் குறைந்துவருவதும் நூலகங்கள் நலிவடைய காரணாக உள்ளது எனவும் சமூக ஆர்வலர்களில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். 
இதற்கு காரணம், அசுர வேகத்தில் வளர்ந்துவரும் இணையதளப் பயன்பாடாகும். இணைய தளங்களில் நொடிப் பொழுதில் தேவையான தகவல்களைப் பெறலாம் என்ற நிலையில், நூலகங்கள் எதற்கு என்ற மனோபாவம் மக்களுக்கு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆட்சியாளர்களும் நூலகங்களை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை.
எனவே,  மாணவர்களிடையே நூலகத்தைப் பயன்படுத்தும் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், வாசிப்புத் திறன் மேம்படுவதுடன் சிந்தனைத் திறனும் வளரும் என சமூக அக்கறை உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 
வாடகைக் கட்டடத்தில் நூலகங்கள்: காரைக்காலில் உள்ள பொது நூலகம் மற்றும் கோட்டுச்சேரியில் கிளை நூலகம்  ஆகிய இரண்டைத் தவிர,  மாவட்டத்தில் உள்ள மற்ற 17 நூலகங்களும் வாடகைக் கட்டடத்தில் செயல்படுகின்றன. இங்கு, நாளிதழ்கள் வாசிக்கும் வசதி மட்டுமே உள்ள நிலையில், வாடகையாக ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஏறக்குறைய மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனால், அரசுப் பணம் விரையமாவதாக நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்: கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ் உள்ள நூலகங்களுக்கு இவ்வாறு மாத வாடகையாக ரூ. 10 ஆயிரம் வரை கொடுக்கப்படும் நிலையில், பணியாளர்கள் பற்றாக்குறையால், நூலகங்களை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கலைப் பண்பாட்டுத் துறையும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் செயலில் மட்டும்தான் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், நூலகங்களின் பராமரிப்பு பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. இதனால், முன்பு இருந்ததுபோல், கல்வித்துறையுடன் நூலகத்தை இணைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் பெரிதும் பயனடைய வாய்ப்பு ஏற்படுவதுடன், அரசுக்கும் கூடுதல் செலவு மிச்சமாகும்.
எனவே, நூலகங்களை கல்வித் துறையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை புதுச்சேரி அரசு ஆராயவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற கலைப் பண்பாட்டுத்துறை ஊழியர் ராஜேந்திரன் கூறியது: புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையை பொருத்தவரை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பணியாளர்கள் ஓய்வுபெறும்போது ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால், நூலகங்களை நிர்வகிக்க பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, நலிவடைந்து வரும் நூலகங்களைக் காக்க காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும் அல்லது ஓய்வுபெற்ற பணியாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றார்.
உதவி நூலகத் தகவல் அதிகாரி (பொ) முத்துக்குமரன் கூறியது:
காரைக்கால் பொது நூலகத்தில் கட்டட  சீரமைப்புப் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணி நிறைவுபெறும்போது, புதிதாக நூல்கள் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். நூலக உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும், இதன் மூலமே புத்தகங்கள் வாங்கிச் செல்லவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. கிளை நூலகங்களைப் பொருத்தவரை காலிப்பணியிடங்கள் உள்ளதால் அதுகுறித்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.
புதுச்சேரியில் கலைப் பண்பாட்டுத் துறை என்பது செயலிழந்த துறையாகவே உள்ளது. இதனால், இத்துறையின் கீழ் உள்ள நூலகங்கள் ஒட்டுமொத்தமாக மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. நூலகங்களில் உள்ள புத்தகங்கள் கரையான்களால் அரிக்கப்பட்டு, குப்பையில் வீசப்படும் நிலையில் உள்ளது வேதனையளிக்கிறது. எனவே, நூலகங்களை தலை நிமிரச் செய்யும் வகையிலான சிறப்பு முடிவுகளை புதுச்சேரி அரசு எடுக்கவேண்டும் என்பதே பெரும்பான்மையினர் வலியுறுத்தலாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com