அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 19th September 2019 02:43 AM | Last Updated : 19th September 2019 02:43 AM | அ+அ அ- |

அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி பள்ளிகள் அளவில் மாணவர்களை தேர்வு செய்வதற்காக, அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. திருப்பட்டினம் பகுதி மேலவாஞ்சூர் அரசு தொடக்கப் பள்ளியில் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். மாணவ, மாணவியர் 160 பேர் பல்வேறு தலைப்புகளில் மாதிரிகள் வைத்திருந்தனர். உடல் நலம், உணவு வகைகள், சத்துணவுகள், தூய்மை திட்டங்கள், கழிவுகள் அகற்றம் உள்ளிட்ட பல தலைப்புகளில் மாதிரிகள் தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் (ஓய்வு) எஸ்.தங்கையன், பிற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டனர். நடுவர் குழுவினர் கண்காட்சியைப் பார்வையிட்டு சிறந்த மாதிரிகளைத் தேர்வு செய்தனர். கண்காட்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை ஏ.மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.