குளங்களில் தண்ணீர் சென்றடைவதைக் கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் சென்றடைவதைக் கண்காணிக்க வேண்டும்

காரைக்கால் மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் சென்றடைவதைக் கண்காணிக்க வேண்டும் என அரசுத்துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
காரைக்கால் மாவட்டத்தில், காவிரி நீர் வரும் முன்பாக 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மாவட்ட அரசுத்துறையினர் நிதி பங்களிப்பு, நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டன. 
காவிரி நீர் காரைக்கால் மாவட்டத்தில் நுழைந்துள்ள நிலையில், வேளாண் பணிகள் ஆங்காங்கே நடந்துவருகிறது. நீர்நிலைகளிலும் தண்ணீர் தேங்கிவருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா திருநள்ளாறு பகுதியில் உள்ள பேட்டை, அத்திப்படுகை, அகலங்கண்ணு, செல்லூர், சேத்தூர்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தூர்வாரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட  குளங்களையும், நூலாற்றின் தடுப்பிலிருந்து கடைமடைக்கு தண்ணீர் வெளியேற்றுவதையும் புதன்கிழமை பார்வையிட்டார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியது: மாவட்டத்தில் ஏறக்குறைய 135 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் பல குளங்கள்  தூர்வாரப்பட்டுவருகின்றன. குளங்களில் நீர் வரும் வழி, வெளியேறும் வழியை முறைப்படுத்துமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதன்பேரில், பல குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. நீர் வரும் வழி இல்லாத குளங்களில், பாதையை அமைக்கத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அரசுத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
நல்லம்பல் ஏரியில் நீர் சென்றடைகிறது. வேளாண்மைக்கு ஒரு புறம் தண்ணீர் பயன்படுத்தப்படும் நிலையில், தூர்வாரப்பட்ட குளங்கள் அனைத்திலும் தண்ணீரை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும், நீர் நிரம்புவதை கண்காணிக்குமாறு பொதுப்பணித்துறையினர், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீணாக கடலுக்கு தண்ணீர் செல்லாமல், தேவையான அளவுக்கு தேக்குமிடங்களில் தேக்குவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com