மின் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வலியுறுத்தல்

சாலைகளில் மின் கேபிள்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை விரைவாக மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாலைகளில் மின் கேபிள்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை விரைவாக மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் நகரப் பகுதியில் சாலையோரத்தில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் பல இடங்களில் முறையாக மூடப்படாமல் உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், நேரு மார்க்கெட் புதிய கட்டடம் கட்டுமானம் நடைபெற்றுவரும் நிலையில், இதற்கு புதைவழியாக மின் இணைப்பு தருவதற்காக மார்க்கெட் கட்டடத்துக்கு பின்புறமுள்ள சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, மின் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவுபெறாமல்  சுமார் 2 மாதங்களாக கிடப்பில் உள்ளதால், சாலையில் பயணிப்பதில் சிரமம் நிலவுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஏ.எம். இஸ்மாயில் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
காரைக்காலில் 2 ஆண்டுகளாக நேரு மார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்துக்கு  மின் இணைப்பு கொடுப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புதைவழி  மின் கேபிள் அமைத்தனர். அதற்காக தோண்டப்பட்ட  பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் மார்கெட் வீதி, மாதா கோயில் வீதி, பெரிரா சந்து பகுதிகளில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது.
இந்த திட்டத்துக்காக  2  மின்மாற்றிகளுக்கு  கீழே தோண்டப்பட்ட பெரும் பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
பாதிப்பு குறித்து  மின் துறையில் புகார் செய்தால், அது எங்களின் வேலையல்ல நகராட்சி நிர்வாகம்தான் பள்ளங்களை மூட வேண்டும், மின் இணைப்பு கொடுப்பதுதான் எங்கள் வேலை என்கிறார்கள்.  இரு துறையினருக்கிடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள். 
மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்து வரக்கூடியது பருவமழைக் காலமாக உள்ளதால், இவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com