காரைக்கால் ரயில் நிலையத்தில்  புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் தகவல் 

காரைக்கால் ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக

காரைக்கால் ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் ஜி.ஏ. பா கூறினார்.
தூய்மை இந்தியா திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும், பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டம் தொடங்கியது முதல் தூய்மைப் பணிகள், விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இதேபோல், ரயில்வே துறை பாதுகாப்பு படை சார்பிலும் நாடு முழுவதும் உள்ள ரயில்கள், ரயில் நிலையங்களில் தூய்மை குறித்தும், பணியாளர்களுகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு, பாதுகாப்பு படை சார்பில் செப்டம்பர் 16 முதல் 30-ஆம் தேதி வரை தூய்மை குறித்து 15 நாள்கள் விழிப்புணர்வு மற்றும் ரயில் நிலையம், ரயிலில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அந்த வகையில், காரைக்கால் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில், திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ஜி.ஏ. பா கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் ரயில் பயணிகளிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் தூய்மையை ஆய்வு செய்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காரைக்கால் ரயில் நிலையம் தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், இங்கு நிறுத்தப்பட்டுள்ள ரயில்களும் அவ்வப்போது தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் என ரயில்களில் வருகிறார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, முதியோர்களை முதியோர் இல்லங்களிலும், குழந்தைகளை சைல்டு லைனில் ஒப்படைத்து, பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க  நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
மேலும், ரயில் நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து 182 என்ற இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 தற்போது, ரயில்வேயில் நடைபெறும் பிரச்னைகள் தொடர்பாக காரைக்கால் போலீஸார் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பாரதி மற்றும் நிலையத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com