டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொதுமக்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் அரசுத் துறையினர் ஒருபுறம் பணியாற்றினாலும், பொதுமக்களும் கூடுதல் பொறுப்புடன்

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் அரசுத் துறையினர் ஒருபுறம் பணியாற்றினாலும், பொதுமக்களும் கூடுதல் பொறுப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பேசினார். 
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியில் திங்கள்கிழமை நலவழித் துறை சார்பில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியது: ஆண்டுதோறும் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல் குறித்து அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெறுவோரும் உள்ளனர். அரசு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் தீவிரமான விழிப்புணர்வை செய்ய வேண்டும். குடியிருப்புப் பகுதிகள், பொது இடங்களை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். பஞ்சாயத்து நிர்வாகத்தினர், கழிவுநீர் தேங்கி நிற்காத வகையிலும், குப்பைகள் தேங்காத வகையிலும் அவ்வப்போது சுத்தம் செய்துவர வேண்டும். அரசுத் துறையினர் ஒருபுறம் விழிப்புணர்வு செய்து வந்தாலும், டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சலை முழுவதுமாக கட்டுப்படுத்தும் பொறுப்பு மக்கள் கையிலும் உள்ளது. வீட்டுக்குள்ளும், வெளியேயும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். நலவழித் துறை சுட்டிக்காட்டியுள்ள கப், தேங்காய் மட்டை, தண்ணீர் தேங்கக்கூடிய பொருள்கள் யாவும் வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். 
காய்ச்சல் ஏற்பட்டால், சுயமாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் சீரிய முறையில் தூய்மையை கடைப்பிடித்தால், டெங்கு காய்ச்சல் இல்லாத காரைக்காலை உருவாக்க முடியும் என்றார் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன். 
நிகழ்ச்சியில், நலவழித் துறை துணை இயக்குநர் கே. மோகன்ராஜ், நலவழித் துறையின் கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மற்றும் திருநள்ளாறு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக குடியிருப்புப் பகுதிகளில் அமைச்சர் நலவழித் துறையினருடன் வீடு வீடாகச் சென்று, டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கு மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com