நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

நிலுவையிலுள்ள 3 மாத ஊதியத்தை வழங்கக் கோரி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

நிலுவையிலுள்ள 3 மாத ஊதியத்தை வழங்கக் கோரி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கத் தலைவர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர். புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுத்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு  ஊதியத்துக்குரிய நிதியை வழங்குமாறும், அதே வேளையில் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு 2014-2015 -ஆம் ஆண்டு முதல் 2018-2019 -ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய வீட்டு வரிக்கு ஈடான மானியத்தொகையை வழங்க வேண்டியும், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக நிதிநிலை அறிக்கையில் தனியாக நிதி ஒதுக்கி, உள்ளாட்சித் துறையின் கணக்கின்கீழ் அரசே நேரடியாக மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களுக்கு காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கெளரவத் தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ஐயப்பன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து கண்டன உரையாற்றினர்.
இப்போராட்டத்தில் ஊழியர் சங்கச் செயலர் சண்முகம், பொருளாளர் நெப்போலியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்களின் அத்தியாவசியப் பணிகள், துப்புரவுப் பணிகள், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்குதல் போன்ற  பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com