அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை: புதுச்சேரி அரசுக்கு பாஜக கண்டனம்

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தர இயலாத நிலையில் புதுச்சேரி அரசு இயங்கிக் கொண்டிருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தர இயலாத நிலையில் புதுச்சேரி அரசு இயங்கிக் கொண்டிருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் ஜி. கணேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பு நிறுவனங்களாக பிப்மேட் நிர்வாகத்தின்கீழ் கூட்டுறவு பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், பி.ஆர்.டி.சி., பாப்ஸ்கோ, பி.பி.சி.எல்., பஜன்கோவா போன்ற பல நிறுவனங்கள் உள்ளன. இதில் லாபத்தில் இயங்கக்கூடிய மின்திறல் குழுமம் (பி.பி.சி.எல்.), சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி) போன்றவை இருந்தும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படாமலும், நிறுவன ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்றாமலும் புதுச்சேரி அரசு மிக அலட்சியமாக செயல்பட்டுவருகிறது.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் நிலுவையில் இருந்து வருகிறது. கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை. ஊழியர்களும் பல கட்டப் போராட்டங்களை நடத்திவிட்டு ஓய்ந்துவிட்டனர். நிறுவன ஊழியர்களின் குடும்பம், அவர்களது வாழ்வாதாரத்தைப் பற்றி புதுச்சேரி ஆட்சியாளர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.  அரசு ஊழியர்கள், சார்பு நிறுவன ஊழியர்களிடம் வேலையை மட்டும் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கான ஊதியத்தை தராமல் உள்ள அரசின் போக்கு, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் நடைபெறாத விநோதம் புதுச்சேரியில் நடந்து வருகிறது. மக்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாத நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசை காரைக்கால் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் கண்டிக்கப்படுகிறது. வரும் அக்டோபரில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. அமைப்புச்சாரா ஊழியர்களுக்கும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நிலுவையிலுள்ள ஊதியத் தொகையையும் மற்றும் தீபாவளி போனஸ் தொகையையும் சேர்த்து  உடனடியாக வழங்க வேண்டும். அரசின் அலட்சியம் நீடித்தால், பாஜக சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரிய அளவிலான போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com